சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இ‑சிகரெட்டுகள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
மே 5 முதல் 8 வரை நடந்த சோதனைகளில், இ‑சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவோ அல்லது தன்னார்வமாக ஒப்படைத்ததாகவோ 57 பயணிகளின் வழக்குகள் கண்டறியப்பட்டதாக ICA இன்று(10.01.26) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைகளில் 341க்கும் மேற்பட்ட இ‑சிகரெட்டுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பதிவான வழக்குகளில் சுமார் 67% பேர் குறுகிய கால பார்வையாளர்கள் எனவும், மீதமுள்ள 33% உள்ளூர்வாசிகள், சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால வருகை அனுமதி வைத்திருப்பவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இ‑சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது மற்றும் வாங்குவது முழுமையாக சட்டவிரோதம் என்பதை ICA மீண்டும் நினைவூட்டியுள்ளது. நாட்டிற்குள் நுழையும் அல்லது வசிக்கும் வெளிநாட்டினரும் உள்ளூர் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இ‑சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறுகிய கால விசாவில் வரும் பயணிகள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழையத் தடை விதிக்கப்படும் என்றும் ICA எச்சரித்துள்ளது.
அதேபோல், நீண்ட கால பார்வையாளர் விசா வைத்திருப்பவர்கள் மூன்று முறை மீண்டும் குற்றம் செய்தால், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் சிங்கப்பூரில் நுழைவதற்கும் தடை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.