DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது.
DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த “டேப்-டு-போன்” வசதி பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதன் மூலம் அவர்கள் கடன்,பற்று அட்டைகளுக்கான கட்டணங்களை அவர்களது ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டு மின்னிலக்க பணப்பைகள் இல்லாத அல்லது ரொக்க பணத்திற்கு பதிலாக அட்டைகள் மூலம் பணம் செலுத்த விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் கட்டண தெரிவுகளை இந்த புதிய அம்சம் வழங்குகிறது.
பயனர்களின் அட்டைகளை அல்லது ஆப்பிள் பே, கூகுள் பணப்பை, சாம்சங் பணப்பை போன்ற என்எஃப்சி தொழில்நுட்பம் சார்ந்த செயலிகளை வர்த்தகரின் கைபேசியில் தொடுவதன் மூலம் தங்களின் பரிவர்த்தனைகளை ஒரு சில வினாடிகளில் நிறைவு செய்யலாம்.
இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனமும் ஐபோன்களுக்கான இதே போன்ற “டேப் டு பே” வசதியை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஒரு குறைந்த ரொக்க பரிவர்த்தனை சமூகமாக மாறிவரும் இவ்வேளையில் மின்னிலக்க பணப் பரிவர்த்தனைகளுக்காக வளர்ந்து வரும் தேவையை வர்த்தகர்கள் எளிதில் எதிர்கொள்ள இந்த புதிய அதிரடியான நடவடிக்கை உதவும் என்று DBS வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.
பயனர்கள் 3 எளிய படிநிலைகள் மூலம் தங்களது செயலியில் இந்த புதிய வசதியைத் தொடங்கிக் கொள்ளலாம் எனவும் DBS கூறியுள்ளது.