சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!!
சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 3 சீன நாட்டவர்களைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
இது குறித்து நேற்று(ஜூன் 2) காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி இரவு 7:00 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 29 வயது முதல் 34 வயதான அந்த 3 சீனர்களும் கொள்ளையடித்து விட்டு தபித்து செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
45 வயதான பெண் ஒருவர் குறுந்தகவல் செயலி ஒன்றின் வழியாக அந்நிலய செலாவணி மாற்றுச் சேவை வழங்குவதாக கூறிய ஒரு நபருடன் பழகியுள்ளார். $50,000 ரொக்க பணத்தை அவரிடம் கொடுத்து விட்டு அதற்கு நிகரான வெளிநாட்டு நாணயத்தை தனது மின்னிலக்கப் பணப்பையில் பெற்றுக்கொண்டார்.
அந்த நபர் கூறியபடி தனது குழந்தையுடன் $50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் பேஃபிரண்ட் அவென்யூ பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்த மற்றொரு நபர் அவர்களை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஹோட்டல் அறையினுள் உள்ள குளியலறையில் மற்றொரு நபர் மறைந்திருந்து உள்ளார்.
பெண்மணி தனது கையில் இருந்த பணத்தை வெளியே எடுத்தவுடன், அந்த நபர்களில் ஒருவர் பெண்ணின் கழுத்தை பிடித்து நெரித்து பணத்தை அவரிடம் இருந்து பறித்துள்ளனர்.
. பின்னர் அப்பெண்ணையும் அவரது குழந்தையையும் அந்த அறையின் பால்கனியில் வைத்து பூட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். அதில் தாய்க்கும் குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் குறித்த தகவல் அறிந்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சந்தேக நபர்கள் 3 நபரையும் சாங்கி விமான நிலையத்தில் இருந்த ஷங்காய் நோக்கி செல்ல இருந்த விமானம் ஒன்றில் ஏறியதை உடனடியாக கண்டுபிடித்தனர்.
அதையெடுத்து புறப்பட இருந்த அந்த விமானம் உடனடியாக திரும்புவதற்கு ஏற்பாடு செய்து, அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து $50,000 ரொக்க பணத்தையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 நபர்கள் மீதும் இன்று (ஜூன் 3 ) நீதிமன்றத்தில் காயத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட உள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனையாக 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வழங்கப்படும்.