சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!!
சிங்கப்பூர் : புக்கிட் பஞ்சாங்கில் உள்ள சென்ஜா க்ளோஸில் நேற்று (ஏப்ரல் 25) ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
அந்த விபத்தில் 69 வயதான முதியவர் ஒருவர் மீது குப்பை லாரி மோதி உள்ளது. விபத்தில் காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
விபத்தின் போது அந்த முதியவர் சக்கர நாற்காலியில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் சேனல் என்ற சமூக ஊடகப் பக்கம் பேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றி இருந்தது. அதில் ஆல்பா டபிள்யூ & எச் ஸ்மார்ட் சிட்டியைச் சேர்ந்த ஒரு குப்பை லாரி தடுப்புகளால் சூழப்பட்டு ஒரு HDB கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரிகிறது.
பல காவல் துறை வாகனங்களும் அந்த குப்பை லாரிக்கு அருகில் இருப்பதும் நன்றாக தெரிகிறது. மேலும் அந்த புகைப்படங்களில் குப்பை லாரி ஓட்டுநர் என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்வதும் தெரிகிறது.
இந்த விபத்தானது நேற்று (ஏப்ரல் 25) காலை 8:25 மணியளவில் சிங் கா லாங்கில் நடந்ததாகவும், அதில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு லாரியும் ஒரு பாதசாரியும் சம்பந்தப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 69 வயதான அந்த பாதசாரி சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக குப்பை லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ALBA மற்றும் Huahwa நிறுவனங்கள் இந்த நிகழ்வு குறித்து உறுதிப்படுத்தி உள்ளனர். இறந்தவரின் மறைவு செய்தியைக் கேட்டு நிறுவனம் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துவதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதாகவும் மேலும் நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.