தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

 

தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘செஸ்னா 402’ ரக சிறிய விமானம், சான் ஆண்ட்ரோஸ் நோக்கிச் சென்றது.

தரை இறங்குவதற்குச் சற்று முன்பாக விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அருகில் இருந்த புதர்களுக்குள் விழுந்து நொறுங்கியது.

 

விமானத்தில் 9 பயணிகள், 1 விமானி என மொத்தம் 10 பேர் இருந்தனர். விபத்தின் போது ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து மீட்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.

நாடே மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய சுதந்திர தினம் தற்போது துக்க நாளாக மாறிவிட்டது என்று பஹாமஸ் பிரதமர் பிலிப் டேவிஸ் மிகுந்த வேதனையுடன் இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் ‘பிளமிங்கோ ஏர்’ என்ற உள்ளூர் நிறுவனத்திற்கு சொந்தமானது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளையும் மற்றும் உரிமத்தையும் போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அந்த நாட்டின் வான் விபத்து விசாரணை ஆணையம் (AAIA) மற்றும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.