முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது.
ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆயர் ராஜா விரைவுச் சாலையின் (AYE) 2வது வரிசையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது முன்னாள் சென்ற கார்களை முந்தி செல்வதற்காக மலேசியப் பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனங்களுக்கு இடையே வேகமாக நுழைய முயல்வது அந்த வீடியோ காட்சியில் தெரிகிறது.
திடீரென முன்னாள் சென்ற வெள்ளை நிற “வோக்ஸ்வாகன் கோல்ஃப்” (VW Golf) கார் நின்றபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த காரின் இடதுபுற பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது, அதன் ஓட்டுநர் காற்றில் தூக்கி வீசப்பட்டு தலைகீழாக தார்ச்சாலையில் விழுந்தார்.
அதிர்ஷ்டவசமாக பின்னால் வந்த மற்ற வானங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் பிரேக் போடப்பட்டதால், அவர் மீது எந்த வாகனமும் ஏறாமல் நூலிழையில் பெரிய அசம்பாவிதத்தில் இருந்து அவர் தப்பியுள்ளார்.
விபத்து நடந்தவுடன் கார் ஓட்டுநர் தனது காரில் ஏற்பட்ட சேதத்தை பார்க்காமல் உடனடியாக காரை விட்டு இறங்கி ஓடி வந்து சாலையில் விழுந்து திகைத்துப் போய் அமர்ந்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு உதவினார்.
கார் ஓட்டுநரின் இந்த உடனடி மனிதாபிமானச் செயல் இணையவாசிகளின் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
விரைவுச் சாலையில் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடைவெளியைப் பேண வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.