தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!!
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமண பெருமாள் என்பவரைச் சென்னை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால் தற்போதைய நிலவரப்படி, அமலாக்க துறையும் இந்த விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.
தவெக கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) என்.இளையராஜா, சட்டப்பேரவை தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மறுத்ததால் மிரட்டல் விடுவிக்கப்பட்டதாகவும் கடந்த ஜூன் 29 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதன்மை சதிகாரரான திருநாவுக்கரசு உட்பட 11 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் தொழிலதிபர் லட்சுமண பெருமாள், கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்ந்து கைபேசியில் தொடர்பில் இருந்தது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் இந்தியாவுக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்க அனைத்து விமான நிலையங்களும் லுக் அவுட் நோட்டீஸ் (LOC) அனுப்பப்பட்டுள்ளது.
லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் முக்கிய Whatsapp உரையாடல்களை அழித்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும், இந்த குதிரை பேரத்திற்கான பணப் பரிமாற்றுதலில் அவருக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த சதி திட்டத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவர்கள் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்பினை (Anticipatory Bail) வழங்கியுள்ளது.
லட்சுமண பெருமாளை சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் இந்தியாவிற்கு வரவழைத்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.