சிங்கப்பூர்: ஹெளகாங் 1 ஷாப்பிங் சென்டருக்கு வெளியே முதியவர் ஒருவரின் கை ஆரஞ்சு பழச்சாறு இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதியவரின் வலது கை ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்பதற்காக குடிமைப்பாதுகாப்பு படையினரும் (SCDF) காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவினர்.
கருப்பு நிற மற்றும் சாம்பல் நிற கால் சட்டை அணிந்திருந்த, நரைத்த முடியுடைய முதியவர்,ஐஜூஸ் ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தின் குழாயில் தனது வலது கையைச் சிக்க வைத்திருந்தார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2, 2026) இரவு 7:50 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.
iJooz நிறுவனத்தின் சுயமாக இயங்கும் ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தில் முதியவரின் வலது முன் கை பழச்சாறு கோப்பை வெளிவரும் துவாரத்தில் சிக்கிக்கொண்டது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும்,SCDF வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். SCDF வீரர்கள் சிறப்பு மீட்பு கருவிகளைக் கொண்டு முதியவரை பத்திரமாக மீட்டனர்.
காயமடைந்த முதியவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செங்காங் பொது மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து iJooz நிறுவனம், தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியவுடன், பாதிக்கப்பட்டவரின் நலனே தங்களின் முதன்மையான அக்கறை எனவும் கூறியுள்ளது.
சம்பவம் குறித்து தெரிந்தவுடன் தங்களது தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்ததாக ஐஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட ஆய்வில் இயந்திரத்தில் எந்த ஒரு கோளாறுகளும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்த விற்பனை இயந்திரத்தை சேவையிலிருந்து நீக்கி மேலும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நிறுவனத்தின் தரப்பு கூறியுள்ளது.
இச்சம்பவம் குறித்த 32 வினாடிகள் கொண்ட வீடியோவானது டிக் டாக் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இயந்திரத்தில் இருந்து ஆரஞ்சு பழங்களை எடுக்க முயன்ற போது முதியவரின் கை அதில் சிக்கி இருக்கலாம் என இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.