சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் கைது..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஆள்கடத்தல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் முக்கிய குற்றவாளியான 38 வயது நபர் மீது நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

நேற்று(ஆகஸ்ட் 4) அதிகாலை 1:55 மணியளவில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. கான்பெரா தெருவில் உள்ள ஒரு வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு கும்பல் ஒருவரை அரிவாளால் மிரட்டுவதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கார் வாடகை ஒப்பந்தம் தொடர்பாக இந்தச் சர்ச்சை எழுந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

38 வயதுடைய நபர் ஒருவர் அரிவாளைக் காட்டி மிரட்டி தனது காரின் முன்பக்க பயண இருக்கையில் அமருமாறு பாதிக்கப்பட்டவரிடம் வற்புறுத்தியுள்ளார். பின்னர் அந்த 38 வயதுடைய நபர் காரை வலுக்கட்டாயமாக வேறு இடத்திற்கு ஓட்டி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் 1 ஆணும் 2 பெண்களும் இருந்துள்ளனர்.


இது குறித்த புகார் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உட்லண்ட்ஸ் காவல்துறையினர் (Woodlands police Division), கடத்தப்பட்ட காரைக் கண்டுபிடித்தனர்.

போலீசாரைக் கண்டதும் குற்றவாளிகள் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க முயன்றுள்ளனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே கார் துரத்தல் ஏற்பட்டது.

அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, உட்லண்ட்ஸ் அவென்யூ 7 மற்றும் அவென்யூ 10 சந்திப்பில் (Woodlands Ave 7/Are 10 Junction) இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதியது.

 

விபத்து நடந்த இடத்தில் 38 வயது நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த அரிவாளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்தக் காரில் இருந்த 36 வயது நபர் மற்றும் 30, 38 வயதுடைய 2 பெண்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த 38 வயது நபர் மீது இன்று(ஆகஸ்ட் 5) நீதிமன்றதத்தில், தண்டனைச் சட்டம் 1871-ன் கீழ் கடத்தல் (Abduction)குற்றச்சாட்டும், 1958 -ன் கீழ் அபாயகரமான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்ற மூவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.