ICA பெயரில் புதிய மோசடி..! சிங்கப்பூரில் S$8.8 மில்லியனுக்கும் மேல் இழப்பு!

சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையமான ICA பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இரண்டு வகையான மோசடிகள் குறித்து காவல்துறையும் ICA-வும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. 2026 ஜனவரி முதல் இதுபோன்ற 148 மோசடி வழக்குகளில் S$8.8 மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வகை மோசடியில், மோசடி நபர்கள் தங்களை ICA அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி தொலைபேசியில் தொடர்புகொள்கின்றனர். தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவோ அல்லது அவர்களின் தொலைபேசி எண் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகவோ கூறுகின்றனர்.
பின்னர் அழைப்பு மற்றொரு நபரிடம் மாற்றப்பட்டு, அவர் சீன அதிகாரி போல நடித்து “விசாரணை” அல்லது “ஜாமீன்” என்ற பெயரில் பணத்தை வங்கிக்கு மாற்றுமாறு அல்லது நேரடியாக பணத்தை ஒப்படைக்குமாறு கேட்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில சம்பவங்களில் போலி ஆவணங்களில் கையெழுத்திடுமாறும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வகை மோசடியில் மட்டும் ஜனவரி முதல் குறைந்தது 117 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது S$8.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது வகை மோசடியில், Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் சிங்கப்பூர் நிரந்தரக் குடியுரிமை (PR) விண்ணப்பத்திற்கு உதவுவதாக போலியான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
அந்த விளம்பரங்களைத் திறந்தால், போலியான ஆலோசனை நிறுவன இணையதளத்திற்கு அழைத்துச் சென்று தனிப்பட்ட தகவல்களைப் பெறுகின்றனர். பின்னர் WhatsApp மூலம் தொடர்புகொண்டு, முதலீடு, கல்விச் சான்றிதழ் வாங்குதல் அல்லது நன்கொடை போன்ற காரணங்களைக் கூறி S$200 முதல் S$90,000 வரை பணம் செலுத்துமாறு கேட்கின்றனர்.
சிலர் பின்னர் ICA பெயரில் போலியான மின்னஞ்சலையும், ICA தலைப்புடன் கூடிய போலி In-Principle Approval (IPA) கடிதத்தையும் பெறுகின்றனர். அந்த ஆவணங்களை ICA-விடம் சரிபார்க்கும்போதுதான் சிலர் மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது.
இந்த வகையில் ஜனவரி முதல் குறைந்தது 31 புகார்கள் பதிவாகியுள்ளன. இதனால் குறைந்தது S$400,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக ICA தெரிவித்துள்ளது.
PR விண்ணப்பத்தை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறும் தனியார் நிறுவனங்களின் சேவைகளை ICA ஆதரிக்கவோ அங்கீகரிக்கவோ இல்லை. பொதுமக்கள் PR உள்ளிட்ட விண்ணப்பங்களை நேரடியாக ICA அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் ஒருபோதும் பணம், வங்கி உள்நுழைவு விவரங்கள் அல்லது சரிபார்க்கப்படாத செயலிகளை கேட்கமாட்டார்கள். சந்தேகம் இருந்தால் 24 மணி நேர ScamShield உதவி எண்ணான 1799-ஐ தொடர்புகொள்ளலாம்.
இந்த மோசடிகள் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், எதிர்பாராத தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை நம்புவதற்கு முன் அதிகாரப்பூர்வ வழிகளில் அவற்றைச் சரிபார்க்க வேண்டும் என்றும் காவல்துறையும் ICA-வும் அறிவுறுத்தியுள்ளன.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
