சிங்கப்பூரில் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி..!! யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்?

சிங்கப்பூரில் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி..!! யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்?

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் மாடர்னாவின் மேம்படுத்தப்பட்ட ஸ்பைக்வேக்ஸ் XFG மெசஞ்சர் ஆர்.என்.ஏ (mRNA) கோவிட்-19 தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் தடுப்பூசியை ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடர்னா சிங்கப்பூர் நேற்று (28ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில், JN.1 வம்சாவளியைச் சேர்ந்த XFG வகையை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் XFG என்பது JN.1 வகையின் ஒரு மாறுபாடு ஆகும். புதிய தடுப்பூசி XFG மாறுபாட்டை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பம், மனித உடலின் செல்களை வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்கத் தூண்டுகிறது. இதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸை அடையாளம் கண்டு, அதற்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க உதவுகிறது.

கோவிட்-19 வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால், உலகளாவிய பொது சுகாதார மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் தடுப்பூசிகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப புதுப்பித்து வருகின்றன.

2026-2027ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளில் XFG வகையை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்புகள் விரும்பத்தக்க இலக்காக அடையாளம் கண்டுள்ளதாக மாடர்னா தெரிவித்துள்ளது. மேலும், வலுவான நோயெதிர்ப்பு சக்திக்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில் XFG-ஐ இலக்காகக் கொண்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பும் (WHO) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லியுங் ஹோ-நாம், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 இன்னும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் நோய் பரவல் குறைந்திருந்தாலும், அதனால் கோவிட்-19 பாதிப்பு முற்றிலும் ஆபத்தற்றது என்று கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் மருத்துவ ரீதியாக அதிக ஆபத்துள்ளவர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட கடுமையான கோவிட்-19 தொற்றுக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்கள், தேசியப் பரிந்துரைகளின்படி உரிய நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சிங்கப்பூர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.