12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்!

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்..! சிங்கப்பூரில் பரிதாபம்!

சிங்கப்பூரின் காலாங் பகுதியில் உள்ள தஞ்சோங் ரூ ரிவர்ஃபிரண்ட் II கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மனிதவள அமைச்சு (MOM) விசாரணை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 28ஆம் தேதி மாலை சுமார் 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத் தளத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கட்டுமானப் பணியின்போது, 12வது மாடியில் நகரும் கான்கிரீட் பம்ப் இயந்திரத்தைப் பயன்படுத்தி சிமெண்ட் கலவையை ஊற்றும் பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. அப்போது அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து மாலை 4:20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்தது. அவசர உதவிக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரி உறுதி செய்தார்.

விபத்தைத் தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதியில் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் மற்றும் வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஒப்பந்த நிறுவனமான PHCC Construction Singapore உடன் இணைந்து குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும், தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து வேலையிடப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

உயரத்தில் பணிபுரியும் போது ஊழியர்கள் கீழே விழுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவனங்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பணியிடங்களில் முறையான கண்காணிப்பு, இயந்திரங்களை முன்கூட்டியே சரிபார்த்தல் மற்றும் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் வேலையிட மரண விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 1.1 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் துறையில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட சம்பவங்கள் குறைந்திருந்தாலும், தவறி விழுதல் மற்றும் உயரத்திலிருந்து கீழே விழுதல் போன்றவை வேலையிட விபத்துகளில் முக்கிய காரணிகளாக தொடர்ந்து உள்ளன.