4 வயது சிறுவனை பேருந்து நிறுத்தத்தில் அறைந்த நபருக்கு 14 வார சிறை..! சம்பவம் நடந்தது எப்படி?

4 வயது சிறுவனை பேருந்து நிறுத்தத்தில் அறைந்த நபருக்கு 14 வார சிறை..! சம்பவம் நடந்தது எப்படி?

சிங்கப்பூரில் 4 வயது சிறுவன் நடுவிரலைக் காட்டியதால் ஆத்திரமடைந்த நபர், அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து சென்று பொதுமக்கள் முன்னிலையில் பலமுறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட Muhammad Firdhaus Mokhtar என்ற நபருக்கு நீதிமன்றம் 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும், சிறுவனின் தாயாருக்கு S$170 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் 2026 மார்ச் 6ஆம் தேதி மதிய நேரத்தில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது மகனை அழைத்துச் செல்வதற்காக ஒரு preschool கல்வி நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அவருடைய மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் அவரைப் பார்த்து நடுவிரலைக் காட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுவனை தன்னிடம் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சிறுவன் அவரிடம் செல்லாமல், வெளியில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒரு பெண் பணியாளரிடம் சென்றுள்ளார்.

அந்த நபரும் சிறுவனைப் பின்தொடர்ந்து பேருந்து நிறுத்தம் வரை சென்றுள்ளார்.

பேருந்து நிறுத்தத்தில் அந்த நபர் சிறுவனின் கையைப் பிடித்து, மற்றவர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டக்கூடாது என்றும், இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், சிறுவனின் பெற்றோரிடம் இந்த விஷயத்தைத் தெரிவிக்குமாறு அங்கிருந்த பெண் பணியாளரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, சிறுவனை அறையப் போவதாகவும் மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் பயந்து அருகிலிருந்த ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த நபர் சிறுவனின் சட்டையைப் பிடித்து அவரை வெளியே இழுத்துள்ளார்.

பின்னர் அந்த நபர் சிறுவனின் வலது கன்னத்தில் கையின் பின்புறத்தால் அறைந்துள்ளார். அதன்பிறகு இடது கன்னம் மற்றும் காதுப் பகுதியிலும் அறைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அடி பலமாக இருந்ததால் சிறுவன் கீழே விழுந்துள்ளார்.

சிறுவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல பெண் பணியாளர் முயற்சி செய்தபோதும், அந்த நபர் உடனடியாக விலகவில்லை.

மேலும், சிறுவனின் விரல்களை உடைத்துவிடுவதாகவும் மிரட்டியதுடன், அடுத்த திங்கட்கிழமை மீண்டும் வந்து சிறுவனைத் தேடுவேன் என்றும் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பல preschool குழந்தைகள் முன்னிலையில் நடந்துள்ளது. சம்பவத்தின் ஒரு பகுதி அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது.

சிறுவன் அழுதுகொண்டிருந்த நிலையில், பெண் பணியாளர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுவனின் காதுகள், கன்னங்கள் மற்றும் தாடைப் பகுதியில் சிவப்பு நிற அடையாளங்கள் இருப்பதை அவரது தாயார் கவனித்துள்ளார்.பின்னர் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் இரு கன்னங்களிலும் காயத்தால் ஏற்பட்ட கருமையான தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு 5 நாட்களுக்கு paracetamol மருந்து வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையே பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்தது.

இந்த சம்பவத்தின் தாக்கம் சிறுவனுக்கு உடல் காயங்களுடன் மட்டும் முடிவடையவில்லை. சம்பவம் நடந்த இரவு சிறுவன் தூங்கும்போது இரண்டு முறை அழுதபடி எழுந்துள்ளார்.

அடுத்த சில நாட்களிலும் அவர் பள்ளிக்குச் செல்ல பயந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்த அங்கிள் மீண்டும் என்னை பலமாக அடித்துவிடுவாரோ” என்ற பயம் சிறுவனிடம் இருந்ததாக அவரது தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் காரணமாக, பெற்றோர் சிறுவனை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர். ஆனால் பள்ளி மாற்றப்பட்ட பிறகும், நடந்த சம்பவத்தை சிறுவன் நீண்ட காலம் நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அடிக்கடி அழுததுடன், தொடர்ந்து கனவுகளால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் தற்போது மெதுவாக மீண்டு வந்தாலும், அந்த சம்பவத்தின் மன உளைச்சலில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை என்றும் அவரது தாயார் கூறியுள்ளார். அவரது தன்னம்பிக்கையும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Muhammad Firdhaus Mokhtar, வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றச்சாட்டு மற்றும் சிறாருக்கு எதிராக குற்றவியல் வன்முறையைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் ஒரு குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கும் போது கருத்தில் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி Koo Zhi Xuan, இளம் குழந்தைக்கு எதிராக இவ்வாறு வன்முறையைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, அந்த நபர் தனது சொந்த குழந்தையிடம் வீட்டில் இவ்வாறு நடந்துகொண்டிருந்தாலும் அது நியாயப்படுத்த முடியாத ஒன்று என்றும், ஆனால் பொதுமக்கள் மற்றும் பிற குழந்தைகள் முன்னிலையில் தனக்குத் தொடர்பில்லாத சிறுவன் மீது வன்முறை பயன்படுத்தியது மேலும் தீவிரமானது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

சிறுவனும் அவரது குடும்பத்தினரும் சந்தித்த மன உளைச்சலும் மிகவும் தீவிரமானதாக நீதிமன்றம் கருதியுள்ளது.

இதையடுத்து Muhammad Firdhaus Mokhtar-க்கு 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், சிறுவனின் தாயாருக்கு S$170 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தில் அந்த நபர் சிறுவனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதுடன், தன்னை மன்னிக்குமாறும், இனிமேல் சிறந்த மனிதராக மாற வாய்ப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவரது மனைவி தற்போது 23 வார கர்ப்பிணியாக இருப்பதால், சிறைத்தண்டனையைத் தொடங்குவதற்கான தேதியை நவம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இதற்குப் பிறகு மீண்டும் தண்டனை ஒத்திவைப்புக்கு விண்ணப்பிக்கமாட்டேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 4 வயது சிறுவன் என்பதால், அவரது அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் வெளியிடத் தடை உத்தரவு (gag order) பிறப்பித்துள்ளது.

இதனால் சம்பவம் நடைபெற்ற preschool கல்வி நிலையத்தின் பெயர் உள்ளிட்ட சிறுவனை அடையாளம் காண உதவும் சில தகவல்களை வெளியிட முடியாது.

ஒரு சிறிய குழந்தையின் செயலால் ஏற்பட்ட கோபத்தை கட்டுப்படுத்தாமல், அவரைத் துரத்திச் சென்று பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையின் தீவிரத்தையும் அதன் நீண்டகால மனநல தாக்கத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.