சிங்கப்பூரில் 3 ஆண்டுகளாக அனுமதியின்றித் தங்கிய பெண்..! அடைக்கலம் கொடுத்த நபருக்கு சிக்கல்!

சிங்கப்பூரில் 3 ஆண்டுகளாக அனுமதியின்றித் தங்கிய பெண்..! அடைக்கலம் கொடுத்த நபருக்கு சிக்கல்!

சிங்கப்பூரில் குடிநுழைவு அனுமதி காலாவதியான நிலையில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தங்கியிருந்த இந்தோனேசியப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 30 வயது சிங்கப்பூர் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2023 மே மாதம் முதல் 2026 மே மாதம் வரை அந்தப் பெண் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருக்க நபர் உதவியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹவ்காங் 5வது அவென்யூவில் உள்ள தனது வீட்டில் அவரைத் தங்க அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 மே 26ஆம் தேதி, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் ஹவ்காங் வீட்டில் சோதனை நடத்தச் சென்றபோது, அந்தப் பெண்ணை அலமாரிக்குள் ஒளிந்துகொள்ளுமாறு நபர் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் கைப்பேசியில் இருந்த தகவல்களை நீக்குமாறு 20 வயது நபர் ஒருவரிடம் அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக Sharizal Bin Saidon மீது, குடிநுழைவு அனுமதி காலாவதியான நிலையில் தங்கியிருக்க உதவியது, அவருக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் அதிகாரிகளின் பணிகளுக்குத் தடையாக இருந்தது என மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடைய Alfira Mongan என்ற 30 வயது இந்தோனேசியப் பெண் ஏற்கெனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 14 வாரச் சிறைத்தண்டனையும் S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டார்.

தண்டனையை நிறைவு செய்த பின்னர் அவர் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதுடன், மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவு அனுமதி காலாவதியானவர்கள் அல்லது சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு தெரிந்தே அடைக்கலம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சம் S$6,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

குடிநுழைவு அதிகாரிகளின் பணிகளுக்குத் தடையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 12 மாதங்கள் சிறைத்தண்டனை, S$4,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள், வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களின் அனுமதிச் சீட்டுகளைச் சரிபார்த்து, அவை செல்லுபடியாகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ICA அறிவுறுத்தியுள்ளது.