மகளை மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்ல அனுமதி மறுப்பு..! IMH மருத்துவரை மிரட்டிய பெண்ணுக்கு 2 நாள் சிறை!

சிங்கப்பூரில் உள்ள மனநல மருத்துவமனையான Institute of Mental Health (IMH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மகளை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 65 வயது பெண், மருத்துவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சம்பவத்தில் இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Wong Nyok Chin என்ற அந்தப் பெண், IMH மருத்துவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பாக Protection from Harassment Act-ன் கீழ் தொடரப்பட்ட குற்றச்சாட்டை அக்டோபர் 2ஆம் தேதி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்றது. அப்போது குறித்த பெண்ணின் மகள், பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால் IMH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் நடந்தபோது அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று குறித்த பெண்ணும் அவரது கணவரும் மகளைப் பார்க்க IMH சென்றிருந்தனர். அப்போது, மருத்துவமனையில் இருந்து வெளியேறி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாக மகள் தெரிவித்தார். குறிப்பாக, கச்சேரி ஒன்றுக்குச் செல்ல விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து அவரது தந்தை மருத்துவரிடம் சென்று மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டுள்ளார்.
ஆனால், மகளின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை என்றும், இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவரிடம் பேசிய பின்னர் தந்தை மீண்டும் மகளிடம் சென்று, அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட மகள் திடீரென கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி, அருகிலிருந்த சுவரில் தனது தலையைப் பலமுறை மோதியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தலையை மோதிய நிலையில், வலி தாங்க முடியாமல் அவர் தரையில் விழுந்துள்ளார்.
இந்தக் காட்சியைப் பார்த்த அவரது தாய் மிகவும் கவலையடைந்ததுடன், மகளை வெளியே செல்ல அனுமதிக்காத மருத்துவரிடம் சென்று பேச முடிவு செய்துள்ளார்.
மருத்துவரை சந்திக்க முயன்றபோது உடனடியாக அவரை சந்திக்க முடியாததால், அந்தப் பெண் மருத்துவரின் அறைக் கதவை தொடர்ந்து பலமாக உதைத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவர் கதவைத் திறந்தபோது, தனது மகளை மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே மருத்துவமனை வளாகத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அவசரக் குழுவினரை அழைத்தனர். அந்தக் குழுவினர் குறித்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அந்தப் பெண் மருத்துவரை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“உன்னைக் கொன்றுவிடுவேன்”, “உன் மீது வழக்குத் தொடருவேன்” என்று அவர் மருத்துவரிடம் கூறியதுடன், தனது மகள் மருத்துவமனையிலேயே இறந்துவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் மருத்துவர் குறித்த பெண்ணின் மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து, அவரது மனநிலையைச் சீராக்க உதவியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
65 வயதான Wong Nyok Chin, IMH மருத்துவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மகளின் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை காரணமாக ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையே இந்தச் சம்பவத்துக்கு வழிவகுத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மருத்துவரை மிரட்டியதற்காக தற்போது அந்தப் பெண் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
