Water Heater பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..! சிங்கப்பூரில் வீட்டுக்குள் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

சிங்கப்பூரின் புங்கோல், எட்ஜ்டேல் பிளெயின்ஸ் பகுதியில் உள்ள HDB வீட்டின் கழிவறையில் அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த 6 பேரும் உடனடியாக வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
684A Edgedale Plains பகுதியில் உள்ள 5-வது மாடி வீட்டில் அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வீட்டில் இருந்த பெண் குளித்துக்கொண்டிருந்தபோது, கழிவறையில் இருந்து “பட் பட்” என்ற சத்தம் கேட்டதுடன் புகை வாசனையும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் முதலில் வாட்டர் ஹீட்டரை அணைத்துள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்தில் புகை அதிகரித்ததைத் தொடர்ந்து, வீட்டின் கழிவறையைச் சென்று பார்த்தபோது LED விளக்கு பொருத்தப்பட்டிருந்த பகுதியில் சிறிய தீப்பொறி தெரிந்துள்ளது.
தீ பரவுவதை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டில் இருந்த நான்கு குழந்தைகளையும் எழுப்பி, அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
அதிகாலை 4 மணியளவில் அவசர உதவி எண்ணான 995-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) சுமார் 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தீ விபத்தால் கழிவறையில் இருந்த LED விளக்கு அமைப்பு மற்றும் கழிப்பறை பகுதி கடுமையாக சேதமடைந்தன. சில இடங்களில் சுவர் பெயிண்டும் உரிந்து, கருகிய தடயங்கள் ஏற்பட்டுள்ளன.
வீட்டின் உரிமையாளர், தீ விபத்துக்கு வாட்டர் ஹீட்டருடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார வயரிங் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குடிமைப்பாதுகாப்புப் படையின் (SCDF) ஆரம்ப விசாரணையில், கழிவறைக்குள் ஏற்பட்ட மின்சாரக் கோளாறே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்தும் வீடுகளில் முறையான மின்சார இணைப்பு மற்றும் பாதுகாப்பான வயரிங் மிகவும் முக்கியம். சிங்கப்பூர் அதிகாரிகளும் வாட்டர் ஹீட்டரை உரிய முறையில் நிறுவுவதற்காக உரிமம் பெற்ற மின்சார நிபுணரை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகின்றனர்.
இந்த சம்பவத்தில் குடும்பத்தினர் சரியான நேரத்தில் தீயை கவனித்து வெளியேறியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
