யிஷுனில் திடீரென தீப்பிடித்த PMD..! பேட்டரி குறித்து SCDF முக்கிய எச்சரிக்கை!

யிஷுனில் திடீரென தீப்பிடித்த PMD..! பேட்டரி குறித்து SCDF முக்கிய எச்சரிக்கை!

சிங்கப்பூரின் யிஷுன் பகுதியில் தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனம் (PMD) திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அக்டோபர் 6ஆம் தேதி பிற்பகல் சுமார் 1 மணியளவில், Yishun Ring Road மற்றும் Yishun Avenue 2 சந்திப்பில் PMD ஒன்று தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், அதில் நடைபாதையில் PMD ஒன்று தீப்பற்றி எரிவதும், அதிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுவதும் காணப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முதற்கட்ட விசாரணைகளின்படி, PMD-யின் பேட்டரியிலிருந்தே தீ ஏற்பட்டிருக்கலாம் என SCDF தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், மின்சார சைக்கிள்கள் (PAB), தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்கள் (PMD) மற்றும் தனிநபர் நடமாட்ட உதவி சாதனங்கள் (PMA) ஆகியவற்றுக்கு அசல் அல்லாத பேட்டரிகளை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என SCDF பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய சாதனங்களை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பான முறையில் சார்ஜ் செய்வது மற்றும் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவல்களை LTA-வின் அதிகாரப்பூர்வ வழிகாட்டியில் தெரிந்துகொள்ளலாம்.