TPE-யில் பயங்கர விபத்து..! மோட்டார் சைக்கிள் தீப்பிடிப்பு..9 பேர் மருத்துவமனையில்!
சிங்கப்பூரின் Tampines Expressway (TPE)-யில் கார், லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட பல வாகன விபத்து நேற்று (அக்டோபர் 7) காலை ஏற்பட்டது.
காலை சுமார் 6:50 மணியளவில், Punggol Road வெளியேறும் பகுதியைக் கடந்த TPE-யில் PIE நோக்கிச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது. சம்பவ இடத்துக்கு அவசர சேவைகள் வருவதற்கு முன்பாக, பொதுமக்கள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
விபத்தில் லாரி ஓட்டுநர், லாரியில் பயணித்த 6 பேர் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என மொத்தம் 9 பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 8 பேர் செங்ஹாங் பொது மருத்துவமனைக்கும், ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஒருவர் லேசான காயம் அடைந்திருந்தாலும், மருத்துவமனைக்கு செல்ல மறுத்துள்ளார்.
40 வயதுடைய லாரி ஓட்டுநரும், 55 வயதுடைய கார் ஓட்டுநரும் விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், TPE-யில் ஏற்பட்ட இந்த பல வாகன விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.