JEM கார் பார்க்கிங்கில் திடீர் விபத்து..! சுவரை உடைத்த கார்..அதிர்ச்சி காட்சிகள்!

சிங்கப்பூர் ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள JEM பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் கார் ஒன்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுவரின் ஒரு பகுதி உடைந்து, பெரிய ஓட்டை ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் அக்டோபர் 6ஆம் தேதி காலை, JEM பேரங்காடியின் அடித்தளத்தில் உள்ள B2 கார் நிறுத்துமிடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் சுவரில் மோதியதில், சுவரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது.
விபத்து ஏற்பட்ட பகுதி, எஸ்கலேட்டர் அருகே அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. சுவரில் ஏற்பட்ட பெரிய ஓட்டை வழியாக அதன் மறுபுறம் இருந்த எஸ்கலேட்டர் பகுதியும் தெளிவாகத் தெரியும் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் உடைந்த கட்டிடப் பகுதிகளும் காணப்பட்டன.
சம்பவம் தொடர்பாக JEM பேரங்காடியை நிர்வகிக்கும் Lendlease நிறுவனம், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு, நிலைமையை மதிப்பீடு செய்தன.
சேதமடைந்த பகுதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு தேவையான பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தச் சம்பவத்தால் JEM பேரங்காடியின் வழக்கமான செயல்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. JEM பேரங்காடியும் அதன் கார் நிறுத்துமிடமும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
கார் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியது என்பது தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
