S$45 பொம்மையைத் திருட காந்தத்தைப் பயன்படுத்திய ஆடவர்..!! சிங்கப்பூரில் அதிர்ச்சிச் சம்பவம்!

S$45 பொம்மையைத் திருட காந்தத்தைப் பயன்படுத்திய ஆடவர்..!! சிங்கப்பூரில் அதிர்ச்சிச் சம்பவம்!

சிங்கப்பூரில் உள்ள பொம்மைகளைப் பிடிக்கும் விளையாட்டு இயந்திரத்தில் (Claw Machine) காந்தத்தைப் பயன்படுத்தி பரிசுப் பொருளைத் திருட முயன்றதாக ஆடவர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நவம்பர் 5ஆம் தேதி பிற்பகல் சுமார் 1:44 மணியளவில், பென்கூலன் ஸ்ட்ரீட்டில் உள்ள சன்ஷைன் பிளாசா வணிக வளாகத்தில் அமைந்துள்ள பொம்மை விளையாட்டு இயந்திரக் கடையில் நடந்துள்ளது.

கடையின் 33 வயது உரிமையாளர் சியாவ் சின் யுவான் (Xiao Qinyuan) கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆடவர் ஏற்கெனவே கடைக்கு அடிக்கடி வரக்கூடிய வாடிக்கையாளர் ஆவார். கடை தொடங்கிய முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்த அவர், பின்னர் வருகையைக் குறைத்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் சுமார் 1:35 மணியளவில் அந்த ஆடவர், கடை உரிமையாளரின் தனிப்பட்ட மற்றும் வணிக WhatsApp கணக்குகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்தச் செய்திகளை நீக்கியுள்ளார்.

இதையடுத்து, கடையின் கண்காணிப்புக் கேமரா காட்சிகளைச் சரிபார்த்த உரிமையாளர், அந்த ஆடவர் இயந்திரத்தில் விளையாடிக்கொண்டிருந்ததையும், சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டதையும் கவனித்துள்ளார்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளில், அந்த ஆடவர் தனது வலது கையால் இயந்திரத்தின் பிடிக்கும் கருவியை இயக்கிக்கொண்டே, இடது கையில் காந்தம் போன்ற ஒரு பொருளை வைத்துக்கொண்டு இயந்திரத்தின் பக்கவாட்டில் நீட்டியிருப்பது தெரிகிறது.

அதன் மூலம் இயந்திரத்துக்குள் இருந்த போகிமான் (Pokémon) சேகரிப்புத் தகரப் பெட்டியைப் பரிசு வெளியேறும் பகுதிக்குள் இழுக்க அவர் முயன்றதாகக் கூறப்படுகிறது.

முதல் முயற்சியில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும், இரண்டாவது முயற்சியில் இயந்திரத்தின் பிடிக்கும் கருவி பரிசுப் பொருளைத் தூக்கிய அதே நேரத்தில், காந்தத்தைப் பயன்படுத்தி அந்தப் பெட்டியை வெளியேறும் பகுதிக்குள் இழுத்துள்ளார். இதனால், இயந்திரத்தின் மூலம் வழக்கமாகப் பரிசைப் பிடித்தது போன்ற தோற்றம் ஏற்பட்டதாகக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்தப் பரிசுப் பொருளை எடுத்துக்கொண்டு ஆடவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

திருடப்பட்டதாகக் கூறப்படும் போகிமான் தகரப் பெட்டியின் மதிப்பு சுமார் S$45 ஆகும். அந்த ஆடவர் இயந்திரத்தில் சுமார் S$30 மட்டுமே செலவிட்டுப் பரிசைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் தொழிலை நடத்தி வரும் தமக்கு, ஒருவர் காந்தத்தைப் பயன்படுத்தி இயந்திரத்திலிருந்து பரிசைப் பெற முயன்றது இதுவே முதல்முறை எனக் கடை உரிமையாளர் தெரிவித்தார்.


மேலும், அந்த ஆடவர் வழக்கமாகக் கடைக்கு வந்த வாடிக்கையாளர் என்பதால், இத்தகைய செயலில் ஈடுபட்டது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார். மற்ற பொம்மை விளையாட்டு இயந்திரக் கடைகளிலும் அவர் இதே முறையைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், இந்தச் சம்பவத்தைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்ததை உறுதிப்படுத்திய காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கடையில் பெரும்பாலான நேரங்களில் பணியாளர்கள் இல்லாத சூழல் இருப்பதால், சம்பந்தப்பட்ட இயந்திரத்தை மற்ற இரண்டு இயந்திரங்களுக்கு இடையில் மாற்றி வைக்கவும் கடை உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் இயந்திரத்தின் பக்கவாட்டில் இருந்து யாரும் அணுகுவதைத் தடுக்க முடியும் என அவர் நம்புகிறார்.

சுமார் S$45 மதிப்புள்ள பரிசுப் பொருளைப் பெறுவதற்காகக் காந்தத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயன்றதாக எழுந்துள்ள இந்தச் சம்பவம், சிங்கப்பூரில் பொம்மை விளையாட்டு இயந்திரக் கடை உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.