Grab கிடைக்காததால் தானே கார் ஓட்டிய CEO..!!மது போதையில் எதிர்திசையில் சென்றதால் 6 மாதம் சிறை!


சிங்கப்பூரில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான United Global Limited-ன் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி ஹோ சீ ஹோன் (Ho Chee Hon), மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதுடன், எதிர்திசையில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
49 வயதான அவர், கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி இரவு டெம்ப்ஸி சாலையில் (Dempsey Road) உள்ள உணவகம் ஒன்றில் நண்பருடன் சேர்ந்து ஒயின் அருந்தியுள்ளார். பின்னர் இரவு சுமார் 11 மணியளவில் காரில் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார்.
ஹாலந்து சாலை சந்திப்பை நெருங்கியபோது, மற்றொரு காரைத் தவிர்க்க முயன்ற அவர் திடீரென காரைத் திருப்பியுள்ளார். இதனால் காரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மற்றும் சாலையின் நடுப்பகுதியில் ஏறியுள்ளார். தொடர்ந்து சுமார் 12 விநாடிகள் எதிர்திசையில் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்னர் ரிடவுட் சாலையில் திரும்பும்போது, சாலையோரப் பள்ளத்தில் கார் விழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆல்கஹால் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது மூச்சுக்காற்றில் 100 மில்லிலிட்டருக்கு 97 மைக்ரோகிராம் ஆல்கஹால் பதிவாகியிருந்தது. சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட அளவு 35 மைக்ரோகிராம் மட்டுமே.
குறிப்பாக, ஹோ சீ ஹோன் ஏற்கெனவே 2017ஆம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபராதம் செலுத்தியதுடன், 20 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தன்று வீட்டிற்குச் செல்ல Grab வாடகைக் காரை முன்பதிவு செய்ய முயன்றும் முடியாததால், தானே காரை ஓட்டிச் சென்றதாக அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 25ஆம் தேதி நீதிமன்றம் அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை, S$25,000 அபராதம் மற்றும் 9 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதித்து உத்தரவிட்டது. அபராதத் தொகையைச் செலுத்தியுள்ள அவர், டிசம்பர் 1ஆம் தேதி சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்கவுள்ளார்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
