சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் பிளாசாவில் பறவைகள் மோதி உயிரிழப்பு? நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!


சிங்கப்பூரின் வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள West Coast Plaza வணிக வளாகத்தின் கண்ணாடிச் சுவரில் மோதி அரிய வகை வலசைப் பறவை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 9 மணியளவில் வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், வணிக வளாகத்திற்கு அருகே பறவை ஒன்று அசைவற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அந்தப் பறவை கண்ணாடிச் சுவரில் மோதி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பறவையைப் புல்வெளிக்கு மாற்றிய அவர், அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார்.
இறந்த பறவை, சிங்கப்பூருக்கு வலசையாக வரும் அரிய வகைப் பறவையான Hodgson’s Hawk-Cuckoo (பழுப்பு வயிற்றுப் பருந்துக் குயில்) எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வகைப் பறவைகள் சிங்கப்பூரில் அதிகம் காணப்படுவதில்லை என தேசிய பூங்காக்கள் வாரியத்தின் (NParks) தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்தப் பெண் கூறுகையில், இதுபோன்ற பறவை–கண்ணாடி மோதல் சம்பவங்களைத் தான் பல ஆண்டுகளாகக் கவனித்து வருவதாகவும், இதுவரை குறைந்தது 10 சம்பவங்களை நேரில் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து வணிக வளாக நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அதற்குப் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வணிக வளாகத்தின் வெளிப்புறக் கண்ணாடிச் சுவர்களில் வானம் மற்றும் சுற்றியுள்ள மரங்களின் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதால், பறவைகள் அவற்றை உண்மையான இயற்கைக் காட்சிகள் எனத் தவறாகக் கருதி வேகமாகப் பறந்து வந்து மோதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கண்ணாடிகளில் பிரதிபலிப்பைக் குறைக்கும் ஸ்டிக்கர்கள் அல்லது பிரத்யேகப் பாதுகாப்பு ஒட்டுகளைப் பயன்படுத்தி, ஜன்னல்களின் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
புகார்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) வெளியிட்டுள்ள ‘Bird-Safe Building Guidelines’ எனப்படும் பறவைகள் பாதுகாப்பான கட்டிடங்களுக்கான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் உயரமான கட்டிடங்களின் எண்ணிக்கை காரணமாக, பறவைகள் கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக NParks தெரிவித்துள்ளது.
கட்டிடங்களின் கண்ணாடிகளில் வானம், மரங்கள் மற்றும் சுற்றுப்புறப் பசுமைக் காட்சிகள் பிரதிபலிக்கும்போது, பறவைகள் அவற்றைத் திறந்தவெளி என நினைத்து பறக்கின்றன. இதனால் கண்ணுக்குத் தெரியாத தடையாக இருக்கும் கண்ணாடியில் மோதி உயிரிழக்கின்றன. குறிப்பாக, அதிக கண்ணாடிப் பரப்புகளைக் கொண்ட கட்டிடங்களில் இந்த ஆபத்து அதிகமாக உள்ளது.
NParks வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் பிரதிபலிப்பைக் குறைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைச் செய்யலாம்.
கண்ணாடிகளில் பறவைகள் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டலாம்.
பிரதிபலிப்பைக் குறைக்கும் பிரத்யேக கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.
கட்டிடங்களின் வெளிப்புறத்தில் சூரிய ஒளித் தடுப்பான்கள் மற்றும் பால்கனி போன்ற அமைப்புகளை ஏற்படுத்தலாம்.
உட்புறங்களில் திரைச்சீலைகள் மற்றும் Blinds பயன்படுத்தலாம்.
இரவு நேரங்களில் தேவையற்ற மின்விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
இந்த நடவடிக்கைகள் கண்ணாடிச் சுவர்களை பறவைகள் எளிதில் அடையாளம் காண உதவுவதுடன், அவை மோதுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் Lee Kong Chian Natural History Museum சார்பில் செயல்படும் Dead Bird Hotline அமைப்புக்கு, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 650 இறந்த பறவைகள் தொடர்பான புகார்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்களில் மோதி உயிரிழந்த பறவைகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இறந்த பறவைகளைக் கண்டால், அவற்றின் புகைப்படம், கண்டறியப்பட்ட தேதி, நேரம் மற்றும் GPS இருப்பிட விவரங்களுடன் கீழ்க்கண்ட வழிகளில் தகவல் தெரிவிக்கலாம்.
WhatsApp: 9876 4997
Telegram: @deadbirdhotline
இதன் மூலம் பறவைகளின் உயிரிழப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்து, ஆய்வாளர்கள் நீண்டகால கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், காயமடைந்த வனவிலங்குகளைப் பொதுமக்கள் தாங்களாகவே கையாள வேண்டாம் என்றும், அவசர உதவி தேவைப்படும் வனவிலங்குகள் குறித்து NParks அமைப்பின் 24 மணி நேர Animal Response Centre எண்ணான 1800-476-1600 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறிய உயிரினங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கட்டிட வடிவமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
