கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்...!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் லீக் தொடரின் தொடக்க தேதி மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மே 17 ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போட்டிகள் அனைத்தும், இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் செவ்வாய்க்கிழமைக்குள் உள்ளூர் மைதானங்களில் இருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் போட்டிக்கான இடங்களாக பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத், டெல்லி மற்றும் மும்பை ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் போட்டி நடைபெறும் இடமாக சென்னை தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் மைதானம்:

18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 27 ஆம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் தர்மசாலாவில் பாதியில் கைவிடப்பட்ட டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி, ஜெய்ப்பூரில் 24 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி இரண்டு லீக் போட்டிகளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 20 ஆம் தேதியும், குஜராத் அணிக்கு எதிராக 25 ஆம் தேதியும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லீக் போட்டிகள் 27 ஆம் தேதி முடிவடையும் நிலையில், தகுதிச் சுற்றுப் போட்டிகள் 29 ஆம் தேதி தொடங்க உள்ளன. இருப்பினும், இந்தப் போட்டிகளுக்கான இடங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.