“காரில் வெடிகுண்டு இருக்கிறதா?” – Woodlands Checkpoint-ல் நபர் செய்த கேலி.. அடுத்து நடந்தது என்ன?

சிங்கப்பூரின் Woodlands Checkpoint-ல் தனது காரில் வெடிகுண்டு இருப்பதாக கேலி செய்து கருத்து தெரிவித்த 35 வயது ஆடவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை சுமார் 6:20 மணியளவில் இடம்பெற்றதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
அப்போது அந்த ஆடவர் மேலும் ஐந்து பேருடன் காரில் பயணம் செய்துள்ளார். அவர்கள் Woodlands Checkpoint-ன் Arrival Cargo Zone பகுதியில் மேலதிக சோதனைக்காக அதிகாரிகளால் நிறுத்தப்பட்டனர்.
காரில் சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அந்த ஆடவர் ICA அதிகாரிகளிடம் தனது காரில் வெடிகுண்டு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்களா என்பது தொடர்பாக கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கருத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காரிலும் அதில் பயணம் செய்தவர்களிடமும் கூடுதல் சோதனைகள் நடத்த கூடுதல் வளங்கள் பயன்படுத்தப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் காரில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் Protection from Harassment Act-ன் கீழ், அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய முறையற்ற தகவல் தொடர்பு தொடர்பான குற்றத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரின் அனைத்து சோதனைச் சாவடிகளின் பாதுகாப்பையும் ICA தீவிரமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் முழுமையாக விசாரிக்கப்படும் என்றும், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய பொய்யான அல்லது தவறான தகவல்களை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ICA எச்சரித்துள்ளது.
மேலும், சோதனைச் சாவடிகளில் பயணிகள் ஒழுங்காக நடந்துகொண்டு, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் ICA கேட்டுக்கொண்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
