சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!!

சிங்கப்பூரில் திடீரென மோசமடைந்த காற்றின் தரம்..!! பல பகுதிகளில் புகைமூட்டம்..!!

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் நேரத்தில் உள்ளூர் காற்றின் தரம் திடீரென மோசமடைந்ததுடன், பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் புகைமூட்டம் காணப்பட்டது.

தெற்குப் பகுதிகளில் நேற்று (28 ஆம் தேதி) காலை 11 மணிக்குப் பிறகு மணிநேர PM2.5 செறிவு உயரத் தொடங்கியது.நேற்று பிற்பகல் 2 மணியளவில் இது ஒரு கன மீட்டருக்கு 112 மைக்ரோகிராம் என்ற அளவை எட்டியது.

பின்னர் மாலை 4 மணியளவில் 105 மைக்ரோகிராமாக சற்றுக் குறைந்தது.
மேற்குப் பகுதியிலும் காற்றின் தரம் படிப்படியாக மோசமடைந்தது.

பிற்பகல் 1 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 61 மைக்ரோகிராமாக இருந்த மணிநேர PM2.5 செறிவு, மாலை 4 மணியளவில் 117 மைக்ரோகிராமாக உயர்ந்தது.

இதனால், அந்த நேரத்தில் அதிக அளவு PM2.5 பதிவான பகுதியாக மேற்கு பகுதி இருந்தது.மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளிலும் மாலை 4 மணியளவில் PM2.5 செறிவு முறையே 105 மற்றும் 83 மைக்ரோகிராம் என்ற அளவில் பதிவானது.

வடக்குப் பகுதியில் மட்டும் மணிநேர PM2.5 செறிவு 49 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது.

இதற்கிடையில், PM2.5 துகள்களின் மணிநேர செறிவு அதிகரித்த போதிலும், தீவு முழுவதும் மாலை 4 மணியளவில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடான (PSI) அளவு 64 முதல் 84 வரை இருந்தது. இது மிதமான அளவாகும்.

தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA), அடுத்த சில மணி நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பதை முடிவு செய்யும்போது, மணிநேர PM2.5 செறிவை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அடுத்த நாளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது, 24 மணி நேர PSI முன்னறிவிப்பு மற்றும் அதற்கேற்ற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றின் தரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சமீபத்திய காற்றுத் தரத் தகவல்களை கவனித்து, அதற்கேற்ப தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுவது அவசியம்.