முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும் தெமாசெக் அறக்கட்டளையின் ஆதரவுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை 2024 ஆம் முதல் மார்ச் 2026 வரை இந்த ஆய்வானது நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வில் 15 முதியவர்களும், அதிக கவனிப்பு தேவை உள்ள 66 குழந்தைகளும் பங்கேற்றனர். AWWA – வின் முதியோர் பராமரிப்பு மற்றும் ஆரம்ப கால தலையீட்டு மையத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் லோவாட் (LOVOT) என்ற துணை ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒலிகள், செயல்கள் மற்றும் ஊடாடும் நடத்தைகள் மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறது.
ஆய்விற்கு வந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்களின் சொந்த உடல் நலம் குறித்த தகவல்களை அந்த ரோபோவிடம் பதிவு செய்தனர். அதற்கு ரோபோ அர்த்தமுள்ள தோழமையும், உணர்ச்சிபூர்வமான பதில்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
அதனால் இந்த வகை துணை ரோபோக்கள், முதியோர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் பராமரிப்பில் பெரிய பங்கு வகிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
பல்வேறு பராமரிப்பு சூழல்களிலும் சேவை பெறுவர்களுக்கு, இதுபோன்று தொடர்ந்து பணியாற்றுவோம் என AWWA தெரிவித்துள்ளது. மேலும் லோவாட் பயன்பாடானது விரிவுபடுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
இன்றும் நாளையும் (ஏப்ரல் 14 மற்றும் 15) நடைபெற இருக்கும் உலக முதியோர் தினத்தில் பங்கேற்பாளர்களுக்கு இந்த திட்டமானது சமர்ப்பிக்கப்பட உள்ளது. அங்கு ஆய்வுக் குழுவினர் தங்கள் கண்டுபிடிப்புகளை முன்வைத்து, அதன் தொழில்நுட்பங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.