புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..! தீ விபத்தில் சிக்கிய 70 வயது பெண் உயிரிழப்பு!
சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் உள்ள பெண்டிங் ரோடு, பிளாக் 126-ன் 6-வது மாடி HDB குடியிருப்பு ஒன்றில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, வீட்டின் ஆறாவது மாடி குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறியது. வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியிருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
தீயணைப்பு நடவடிக்கையின்போது, வீட்டுக்குள் மயங்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். அவருக்கு சம்பவ இடத்திலேயே CPR உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதே தீ விபத்தில் அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் புகை சுவாசித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீ விபத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டிடத்தில் இருந்து சுமார் 70 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தீ விபத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட 70 வயதுடைய மூதாட்டி இன்று (செப்டம்பர் 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
SCDF-ன் அறிவுரை: இது போன்ற விபத்துக்கள் நேராமல் இருக்க சமையலைக் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம். மின் இணைப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மின்சாதனங்களை கண்காணிப்பின்றி இரவு முழுவதும் சார்ஜ் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.