இலங்கை பேரிடர் நிவாரணத்தில் எல்லை தாண்டிய ஆதரவு..!!
சிங்கப்பூர்: புயல்கள் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கு உதவ, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நான்கு பேர் கொண்ட மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது.
இந்தக் குழு இன்று (19.12.25) முதல் (25.12.25) ஆம் தேதி வரை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களின் நிர்வாகத்தில் உதவுவதுடன், குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் துப்புரவு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமானத் தேவைகளை மதிப்பிடவும் செயல்படும்.
மேலும், பின்தொடர்தல் நிவாரணம் மற்றும் பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டங்களை உருவாக்குவதிலும் இந்தக் குழு ஈடுபடும். இதற்கு முன்னதாக, இலங்கையில் நிவாரணப் பொருட்கள் வாங்கி விநியோகிக்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 50,000 சிங்கப்பூர் டாலர் நன்கொடை வழங்கியுள்ளது.
டிட்வா சூறாவளி மற்றும் தொடர்ந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் வீடற்றவர்களாகி,பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ உதவி,சுகாதார சேவைகள் மற்றும் வாழ்வாதார மீட்பு உதவி ஆகியவை அவசரத் தேவையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இலங்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தலைவருமான பெஞ்சமின் வில்லியம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.