IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ய முயன்ற வரை சிறப்பு மருத்துவர்களுக்கு கூடுதல் வரி செலுத்துமாறு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களான மருத்துவர்கள் சிலர் தங்களின் மருத்துவ சேவைகளுக்காக பல நிறுவனங்களை உருவாக்கினர்.

தங்களின் உண்மையான வருமானம் ஆண்டுக்கு சராசரியாக $2 மில்லியனுக்கு மேல் இருந்த போதிலும், தங்களுக்கு அந்த நிறுவனங்கள் மூலம் மாதம் $5000 முதல் $6000 வரை மட்டுமே சம்பளம் கிடைப்பதாக காட்டினர்.

மீதமுள்ள பெரும் தொகையை வரியற்ற ஈவுத்தொகை (Dividends) மற்றும் பங்குதாரர் வட்டி இல்லா கடன் என்ற பெயரில் எடுத்துக் கொண்டனர்.

சிங்கப்பூர் வரி விதிப்படி, நிறுவனங்களின் லாபத்திற்கு 17% மட்டுமே வரி விதிக்கப்படும். ஆனால் தனிநபர் வருமானம் $1 மில்லியனைத் தாண்டினால் அதற்கு 24% என்ற உச்சபட்ச தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டும்.

இந்த 24% வரியைத் தவிர்த்து விட்டு, குறைந்த வரியான 17% -யை மட்டும் செலுத்தவே மருத்துவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான இவர்களின் வரி தாக்கல்களை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் தீவிரமாக ஆய்வு செய்தது. இது வணிகரீதியான உண்மையான நோக்கம் கொண்டதல்ல, முழுக்க முழுக்க வரி ஏய்ப்பிற்காக செய்யப்பட்ட போலி ஏற்பாடு என ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.

இதை எடுத்து வருமான வரி சட்டத்தின் பிரிவு 33 -யைப் பயன்படுத்தி நிறுவன வருமானத்தை மருத்துவர்களின் தனிநபர் வருமானமாகக் கணக்கிட்டு, அவர்களின் ஒட்டுமொத்த வருமானத்திற்கும் கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டது

ஆணையத்தின் கூடுதல் வரிவிதிப்பை எதிர்த்து, மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரியைக் குறைப்பதைத் தவிர இந்த நிறுவன அமைப்புகளுக்கு வேறு முறையான காரணங்கள் இல்லை எனக் கூறி மருத்துவர்களின் மனுவை தள்ளுபடி செய்து IRAS -ன் உத்தரவை உறுதி செய்தது.

உயர் வருவாய் ஈட்டுவோர் வரிச்சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி வரியைத் தவிர்க்க முயல்வதை சட்டம் அனுமதிக்காது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.