Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது!

Telegram மூலம் போதைப்பொருள் நடவடிக்கை..! சிங்கப்பூரில் 39 பேர் கைது!

சிங்கப்பூரில் Telegram செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மேற்கொண்ட ஒருநாள் நாடு தழுவிய நடவடிக்கையில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் பாதி பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram-ல் இயங்கி வந்த பல்வேறு சேனல்களில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து CNB விசாரணை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடையவை என்பது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, செப்டம்பர் 15ஆம் தேதி நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஒரே போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையின்போது கஞ்சா, ஐஸ் எனப்படும் மெத்தாம்பெட்டமைன், எக்ஸ்டசி மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களும், போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான பல்வேறு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது.

Telegram போன்ற இணையவழி தளங்களில் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இளைஞர்கள் போதைப்பொருள் குறித்த தவறான தகவல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை எதிர்கொள்வது குறித்தும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தடுக்கும் வகையில், காவல்துறையுடன் இணைந்து Online Criminal Harms Act (OCHA) சட்டத்தின் கீழ், போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய Telegram கணக்குகள் மற்றும் சேனல்களுக்கான சிங்கப்பூர் பயனர்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என CNB தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் இணையத்தில் காணப்படும் போதைப்பொருள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணவும், போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகளைப் புரிந்துகொள்ளவும் பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய பெரியவர்கள் வழிகாட்ட வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 39 பேரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.