எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!
ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
“விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இந்த விபத்தானது தவறான நேரத்தில் நடந்த துரதிஷ்டவசமான நிகழ்வு என்று ஆஸ்திரேலிய நாட்டின் எரிசக்தி துணை அமைச்சரான கிரிஸ் போவான் அவரது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டீசல் விலை இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய மக்கள் பெட்ரோல் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற பயத்தினால் எரிபொருட்களை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தானது இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்புக் கருதி பெட்ரோல் உற்பத்தியானது தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை சரியான பின்னரை உற்பத்தி தொடங்கப்படும் என்று விவா எனர்ஜி தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 1, 20,000 பேரல் எண்ணெய் உற்பத்தியாகிறது. மேலும் அங்கு 1, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா எரிபொருளை இறக்குமதி செய்வதால், நீண்டகால பாதிப்பு இருக்காது என்று வல்லுனர்கள் கூறினாலும், தற்போது உள்ள தட்டுப்பாடும், விலை உயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.