ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த விபத்து குடியிருப்பின் 3வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தொடங்கியுள்ளது. வரவேற்பறையில் தொடங்கிய தீயினால் அந்த வீடு முழுவதும் மற்றும் மேல் தள நடைபாதைகளிலும் அடர்ந்த கரும்புகை வேகமாக சூழ்ந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு குடியிருப்பாளரின் சாதுரியமான மற்றும் துணிச்சலான செயல் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. அவர் ஐந்தாவது தளத்தில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர்; நள்ளிரவில் கழிவறைக்கு செல்வதற்கு அவர் வெளியே வந்துள்ளார்.

அப்போது வழக்கத்திற்கு மாறாக தடினமான புகை சூழ்ந்திருப்பதைக் கவனித்த அந்த நபர் ஏதோ விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்துள்ளார்.

உடனடியாக கீழே இறங்கி சென்று பார்த்ததில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் உடனடியாக அண்டை வீட்டுக்காரர்களின் கதவுகளை வேகமாக தட்டி அவர்களை எழுப்பியுள்ளார்.

உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு அனைவரையும் எச்சரித்துள்ளார். அந்த நபரின் இந்த செயலால் 50 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF தீயணைப்பு வீரர்கள் 3வது தளத்தில் உள்ள அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பாய்ச்சி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் துரிதிஷ்டவசமாக விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் இருந்த 67 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

50 குடியிருப்பாளர்களை வெளியேற்றிய அந்த நபர் இந்த விபத்து குறித்து கூறியதாவது, அந்த பயங்கரமான சம்பவத்தை நினைவு கூறும்போது தான் இன்னும் கடுமையான அதிர்ச்சியிலும் பயத்திலும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

 

சம்பவ இடத்திற்கு அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷியே யாவ் குவான், அந்த குடியிருப்பாளரின் வீரமான செயலைப் பாராட்டி உள்ளார். அவரது இந்த செயல் பெரிய அளவிலான உயிர் சேதத்த்தை தடுத்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக தங்குமிடம் மற்றும் மனநல ஆலோசனை உதவிகளை வழங்க அதிகாரிகளும், சமூக நல அமைப்புகளும் தற்போது இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.