தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!!

தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!!

பிரான்சின் வடமேற்கு பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நார்மண்டி பகுதியில் உள்ள Cléon நகருக்கு அருகே இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் நடந்துள்ளது. Rouen நகரில் இருந்து Caen நோக்கிச் சென்ற ரயிலில் சுமார் 180 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் இருந்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத பொருள் மீது மோதியதைத் தொடர்ந்து தடம் புரண்டதாக பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு பெட்டி கவிழ்ந்ததுடன், மேலும் நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுமார் 140 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பொதுமக்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த விபத்து காரணமாக Rouen–Caen மற்றும் Caen–Le Havre இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்காக மாற்று பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்படுவதாக ரயில் இயக்குநர் SNCF தெரிவித்துள்ளது.

ரயில் தடம் புரண்டதற்கான முழுமையான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக SNCF மற்றும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.