சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிங்கப்பூரில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அரசாங்கம் பல்வேறு உதவி மற்றும் ஆதரவு சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தற்கொலை தடுப்பு தொடர்பான கருத்தரங்கில், சிங்கப்பூர் SOS (Samaritans of Singapore) அமைப்பு கடந்த ஆண்டு பெற்ற சுமார் 40,000 உதவி அழைப்புகளில், ஐந்தில் ஒரு பங்கு தற்கொலை ஆபத்து தொடர்பானதாக இருந்தது என்ற தகவல் வெளியிடப்பட்டது.

அதேபோல், SOS அமைப்பின் CareText சேவைக்கு கடந்த ஆண்டு சுமார் 20,000 குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதில் சுமார் 5-ல் 2 செய்திகள் தற்கொலை ஆபத்து தொடர்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சர் டான் கியாட் ஹாவ், இளைஞர்களிடையே நிலவும் இந்த பிரச்சினையின் தீவிரத்தையும் எடுத்துரைத்தார்.

2018 முதல் 2024ஆம் ஆண்டு வரை, 10 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு தற்கொலை தொடர்ந்து 7 ஆண்டுகளாக முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்கொலை எண்ணங்களை எதிர்கொள்பவர்கள் உதவி தேவைப்படும் நேரத்தில் எங்கு தொடர்புகொள்வது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் பல்வேறு உதவி வழிகளை வலுப்படுத்தி வருகிறது.

இதில் தேசிய மனநல உதவி சேவை 1771, SOS 24 மணி நேர உதவி எண் 1767, மற்றும் CareText சேவை ஆகியவை அடங்கும்.

ஒரு சம்பவத்தை உதாரணமாக குறிப்பிட்ட அமைச்சர், SOS உதவி எண்ணுக்கு அழைத்த ஒருவர் வெறுமனே “என்னுடன் இருங்கள்” என்று கேட்டதாகவும், அவருடன் தன்னார்வலர் ஒருவர் சுமார் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் இருந்து பேசி, அவரை அமைதிப்படுத்த உதவியதாகவும் தெரிவித்தார். பின்னணியில் மற்ற குழு உறுப்பினர்களும் வழிகாட்டி, அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கான நேரத்தை ஏற்படுத்தினர்.

தற்கொலை தடுப்பு என்பது ஒரு நாள் அல்லது ஒரு தொலைபேசி அழைப்புடன் முடிந்துவிடும் நடவடிக்கை அல்ல என்றும், நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதும், நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதும் அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், தற்கொலை மற்றும் மனநலம் தொடர்பான சமூக அவப்பெயரும் மக்கள் உதவி கேட்பதற்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய ஆய்வில், 80% சிங்கப்பூரர்கள் தற்கொலை குறித்து சமூகத்தில் எதிர்மறையான பார்வை இருப்பதாக கருதுவதாக தெரியவந்துள்ளது.


தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்ட இளைஞர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சூழலுக்குத் திரும்ப வேண்டிய நிலை இருப்பதால், சுகாதார அமைச்சகம் Youth Crisis Facility என்ற புதிய இளைஞர் நெருக்கடி உதவி மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த மையம் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் இடையிலான ஒரு இடைநிலை பாதுகாப்பான இடமாக செயல்படும். இங்கு இளைஞர்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்கப்படுவதுடன், அவர்கள் மீண்டும் குடும்பம் மற்றும் சமூகத்துடன் இணைவதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

மனநலம் குறித்து தயக்கமின்றி பேசுவதும், உதவி கேட்பதை பலவீனமாக பார்க்காமல் இருப்பதும் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உதவி தேவைப்படுபவர்கள் தனியாக போராட வேண்டியதில்லை. சரியான நேரத்தில் உதவி கேட்பது ஒரு முக்கியமான முதல் படியாகும்.

SOS 24 மணி நேர உதவி எண்: 1767
CareText WhatsApp: 9151-1767