வாகனம் ஓட்டியபடியே வீடியோ பார்த்த Grab ஓட்டுநர்..!! பயணி செய்த அதிரடி காரியம்..!!

வாகனம் ஓட்டியபடியே வீடியோ பார்த்த Grab ஓட்டுநர்..!! பயணி செய்த அதிரடி காரியம்..!!

சிங்கப்பூரில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர், வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே கார் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கைபேசியில் வீடியோ பார்த்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.

சம்பவத்தின்போது ஓட்டுநர் பயன்படுத்திய கைபேசியில் வழிகாட்டி செயலி இயங்கிக் கொண்டிருந்த நிலையில், அதே நேரத்தில் ஒரு நாடகத் தொடரும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியை பின்பக்க இருக்கையில் இருந்த பயணி தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார்.

சுமார் 10 நிமிடங்கள் நீடித்த அந்தப் பயணத்தின்போது, ஓட்டுநரிடம் நேரடியாக இதுகுறித்து கூற பயணி முதலில் யோசித்துள்ளார். ஆனால் வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அப்போது ஓட்டுநரிடம் எதுவும் கூறாமல் சம்பவத்தைப் பதிவு செய்து பின்னர் இணையத்தில் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும்போது இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பது ஆபத்தானது என்றும், ஓட்டுநர்கள் எப்போதும் சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பயணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயணிகள் செலுத்தும் கட்டணம் எவ்வளவு என்பது முக்கியமல்ல; பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் அடிப்படை பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக Grab நிறுவனம், பாதுகாப்பு தங்களது முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் கூட்டாளர்கள் வாகனம் ஓட்டும்போது சாலை நிலைமைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் ஓட்டுநர், பயணி மற்றும் மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

 

மேலும், பயணிகள் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடவடிக்கையை எதிர்கொண்டால், Grab செயலி மூலமாக நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகார் கிடைத்த பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும்போது சில நொடிகள் கவனம் சிதறுவதுகூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கலாம். எனவே ஓட்டுநர்களின் பொறுப்பான செயல்பாடும், பயணிகளின் பாதுகாப்பும் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்.