சிங்கப்பூரர்களை குறிவைத்த கம்போடியா மோசடி கும்பல்..!! S$52 மில்லியன் இழப்பு.. ஒருவருக்கு சிறை!

சிங்கப்பூரர்களை குறிவைத்த கம்போடியா மோசடி கும்பல்..!! S$52 மில்லியன் இழப்பு.. ஒருவருக்கு சிறை!

சிங்கப்பூர்: கம்போடியாவைத் தளமாகக் கொண்டு சிங்கப்பூரர்களை குறிவைத்து செயல்பட்ட மோசடி கும்பலுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயதான Callurn Lim Yuan Jin, கம்போடியாவில் செயல்பட்ட மோசடி கும்பலின் உறுப்பினராக இருந்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்தக் கும்பல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் வரை குறைந்தது 528 மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் S$52 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Phnom Penh-ஐ மையமாகக் கொண்டு செயல்பட்ட இந்தக் கும்பல், சிங்கப்பூரில் உள்ள பொதுமக்களை குறிவைத்து அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்யும் முறையை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் வயது 26 முதல் 84 வரை இருந்தது. அவர்களில் குறைந்தது 90 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 90 பேரிடம் இருந்து மட்டும் சுமார் S$11.8 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Lim, கும்பலுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து அறிமுகமான ஒருவரை மோசடி அழைப்பாளராக பணியாற்றுவதற்கு சேர்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

மேலும், கம்போடியாவில் உள்ள கேசினோவில் வேலை செய்வதற்காக ஆட்களை அறிமுகப்படுத்தினால் S$10,000 வரை பணம் வழங்கப்படும் என அவரிடம் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 செப்டம்பர் 9ஆம் தேதி, சிங்கப்பூர் போலீஸ் படையினரும் கம்போடியா போலீசாரும் இணைந்து சிங்கப்பூர் மற்றும் Phnom Penh-ல் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது சிங்கப்பூரில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது 30 பேருக்கு Interpol Red Notice பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட Lim-க்கு 1 ஆண்டு, 9 மாதங்கள், 21 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் சிறைத் தண்டனையும், S$12,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த முடியாவிட்டால், மேலும் 4 வாரங்கள் மற்றும் 10 நாட்கள் சிறை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரர்களை குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து செயல்படும் மோசடி கும்பல்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம், குறிப்பாக வயதானவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மோசடிகளில் சிக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.