Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..!

Sheng Siong கடையில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..!! நிறுவனத்துக்கு எதிராக அதிரடி வழக்கு..!

சிங்கப்பூரில் உள்ள Sheng Siong பேரங்காடியில், அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட டிராலி ஒன்று பின்னால் இருந்து மோதியதில் காயமடைந்ததாகக் கூறி பெண் ஒருவர் Sheng Siong நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2 பகுதியில் உள்ள Sheng Siong கடையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது, அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட டிராலி பின்னால் இருந்து மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கடையின் CCTV கேமராவிலும் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராலி மோதியதில் தனது இடது காலில் வீக்கம், சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே இருந்த முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மோசமடைந்ததாகவும், தொடர்ந்து வலி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு அவர் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றுள்ளார்.

மருத்துவச் செலவுகளுக்காக S$9,309.74 மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்காக S$1,783.95 உள்ளிட்ட தொகைகளை அவர் கோரியுள்ளார்.
இதனுடன், ஏற்பட்ட காயம் மற்றும் வலிக்கான இழப்பீடு, எதிர்கால மருத்துவ மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் கோரியுள்ளார்.

பெண் கூறியுள்ள அலட்சியக் குற்றச்சாட்டுகளை Sheng Siong நிறுவனம் மறுத்துள்ளது.
டிராலி செல்லும் பாதையில் அந்தப் பெண் திடீரென வந்ததாகவும், டிராலியைத் தவிர்க்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண் கூறியுள்ள காயங்கள் மற்றும் செலவுகளின் அளவையும் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான இறுதி முடிவை நீதிமன்றமே தீர்மானிக்க உள்ளது.