வேலை தேடுபவர்களுக்கு அதிர்ச்சி..! SPD பெயரில் புதிய வேலை மோசடி..சிங்கப்பூரில் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை குறிவைத்து, உள்ளூர் தொண்டு நிறுவனமான SPD-யின் பெயரைப் பயன்படுத்தி வேலை மோசடி நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு SPD அறிவுறுத்தியுள்ளது.
SPD இன்று (5 அக்டோபர்) வெளியிட்ட தகவலில், சமீபத்தில் சில மோசடி நபர்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பு தொடர்பாக தனிநபர்களை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி, அவர்களிடம் பணத்தை ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றுமாறு மோசடி நபர்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனிநபர்கள் மூலம் இவ்வாறு பணம் வசூலிக்க SPD எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
SPD-யின் பெயரில் சந்தேகத்திற்கிடமான வேலை வாய்ப்பு அல்லது பணம் தொடர்பான கோரிக்கை கிடைத்தால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த, பொதுமக்கள் SPD-யின் 6579 0700 என்ற தொலைபேசி எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு விசாரிக்கலாம்.
மேலும், சந்தேகமான நடவடிக்கை குறித்து உறுதியாகத் தெரியாவிட்டால், எந்தவொரு பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்பு ScamShield 1799 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
தாங்கள் மோசடியில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு, பின்னர் காவல்துறையில் புகார் அளிக்குமாறு SPD அறிவுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை SPD தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், பொதுமக்களையும் தனது ஆதரவாளர்களையும் பாதுகாக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, SPD-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வழக்கமான நன்கொடைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கவனத்துடன் இருக்க வேண்டும்
வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் செலுத்துமாறு கேட்பது, தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்தச் சொல்வது அல்லது சந்தேகமான தகவல்களை வழங்குமாறு வலியுறுத்துவது போன்றவை மோசடியின் அறிகுறிகளாக இருக்கலாம். சிங்கப்பூர் ScamShield-ம், வேலை தொடங்குவதற்கு முன் பணம் செலுத்துமாறு கேட்கப்படும் வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.
எனவே, வேலை தேடும் போது நிறுவனம் மற்றும் வேலை வாய்ப்பின் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்த்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பானது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
