துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!!
சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் பெருமளவில் மின்னணு சிகரெட்டுகளை (Vape) கடத்த முயன்ற சம்பவத்தை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் முறியடித்துள்ளனர். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரட்டுகளும், 9,000-க்கும் மேற்பட்ட மின்னணு காயில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 8ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் நடந்துள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை ICA அதிகாரிகள் விரிவாக சோதனை செய்தபோது, அதன் ஓட்டுநர் அறையில் உள்ள ஓய்வு பகுதியில் மின்னணு சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில் 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகளையும் சாதனங்களும், 9,000-க்கும் மேற்பட்ட மின்னணு காயில்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக 46 வயதுடைய மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் தொடர்பான வழக்கு, மேலதிக விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (HSA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வர்த்தகம் மற்றும் பொதுமக்களின் பயணத்தை தொடர்ந்து எளிதாக்கும் வகையில் ICA தனது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமான மின்னணு சிகரெட்டுகளை கொண்டு வர முயற்சிப்பவர்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். லாரிக்குள் மறைத்து வைத்திருந்தாலும், எல்லைச் சோதனையில் இருந்து சட்டவிரோதப் பொருட்கள் தப்புவது எளிதல்ல என்பதை இந்த சம்பவம் மீண்டும் காட்டியுள்ளது.