பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!!

பெற்றோர்களே உஷார்..! மாணவர்கள் பெயரில் WhatsApp மூலம் புதிய மோசடி..!!

சிங்கப்பூரில் மாணவர்களின் WhatsApp கணக்குகளை கைப்பற்றி, அவர்களது பெற்றோரிடம் மாணவர்கள் போல நடித்து பணம் பறிக்கும் புதிய வகை மோசடி தொடர்பாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதம் தொடக்கம் இதுபோன்ற குறைந்தது 8 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் குறைந்தது S$18,000 பணம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில், முதலில் மாணவர்களின் WhatsApp கணக்குகளுக்கான அணுகலை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் அந்த மாணவர்களைப் போலவே அவர்களது பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

இளைஞர் பரிமாற்றத் திட்டம் அல்லது செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறியில் தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடத்தை உறுதி செய்ய பணம் செலுத்த வேண்டும் என்றும் பெற்றோரிடம் கூறுகின்றனர்.

மோசடியை நம்ப வைப்பதற்காக, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் போலி ஒப்புதல் ஆவணங்களையும் பெற்றோருக்கு அனுப்புகின்றனர்.

மேலும், குறிப்பிட்ட பாடநெறி அல்லது திட்டத்திற்கான கட்டணம் மானியமாக வழங்கப்படும் என்றும், பின்னர் அந்தப் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் சில பெற்றோரிடம் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், PayNow QR குறியீடு மூலம் பணம் செலுத்துமாறு பெற்றோரிடம் மோசடியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சில சம்பவங்களில், முதல் பணம் செலுத்தும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறி, மீண்டும் பணம் செலுத்துமாறும் மோசடியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளிடம் நேரடியாக விசாரித்த பின்னரோ அல்லது வங்கியிடமிருந்து எச்சரிக்கை வந்த பின்னரோ தான் மோசடி நடந்ததை அறிந்துள்ளனர்.

பொதுமக்கள் ScamShield செயலியைப் பயன்படுத்தி மோசடி அழைப்புகள் மற்றும் சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகளைத் தடுக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், WhatsApp கணக்கில் இரண்டு-நிலை சரிபார்ப்பு (Two-Step Verification) வசதியை இயக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக பணம் செலுத்துமாறு கேட்டால், செய்தியை மட்டும் நம்பாமல் அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோல், கல்வித் திட்டம் அல்லது கட்டணம் தொடர்பான கோரிக்கைகள் உண்மையானதா என்பதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்த்த பின்னரே பணம் செலுத்த வேண்டும்.

மோசடியில் சிக்கியிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.