பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!!
சிங்கப்பூரின் மத்திய சமையலறை உணவு வழங்கும் மாதிரியின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
மாணவர்கள் தொடர்ந்து சத்தான, குறைந்த விலையில் சுவையான உணவுகள் பெறுவதை உறுதி செய்வதற்காக மற்ற உணவக மாதிரிகளையும் ஆராய உள்ளதாக கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்ரல் 8) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய சமையலறை உணவு வழங்கல் மாதிரி கீழ் உணவு வீணாவது மற்றும் மாணவர்களின் திருப்தி தொடர்பான விசாரணைகளுக்கு கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இந்த உணவுச் சேவை மாதிரியைச் செயல்படுத்திய சில வாரங்களிலேயே, அதுவும் குறிப்பாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே உணவு வீணாவது குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறியுள்ளார்.
சில குழந்தைகளால் இந்த உணவு வகையை முழுமையாக சாப்பிட முடியவில்லை. அதனோடு அவற்றின் சுவைகள் புதிதாக இருப்பதால் அதற்கு பழகிக்கொள்ளும் நேரம் மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டி இருப்பதால், தேவைப்படும் உணவுகளைத் தேர்வு செய்யவும் நேரம் தேவைப்படுகிறது.
இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து பள்ளிகள் மற்றும் உணவு வழங்கும் நிறுவனங்களின் கருத்துக்களை கல்வி அமைச்சகம் கேட்டு புதிய மேம்பாட்டுத் திட்டங்களை கொண்டு வர இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
உணவு வழங்கும் நிறுவனங்கள் தினமும் 6 முதல் 14 வகையான உணவுகளை வழங்குகின்றன. மேலும் உணவு வகைகள் வாரம்தோறும் அல்லது தினம்தோறும் கூட மாற வாய்ப்புள்ளது.
உணவு வழங்குநர்களுக்கு வழிகாட்டும் வகையில், தரமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்குவதிலும் கல்வி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அதே சமயம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு சுவைகள் உண்டு என்பதையும், அனைவரின் விருப்பங்களுக்கு ஏற்ப, உணவுகள் திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்.