சிங்கப்பூர் நீதிமன்ற கோப்புகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..!! நடந்தது என்ன?

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் அரசு நீதிமன்றங்களுக்கு வெளிப்புற தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிபுணராகச் சேவை வழங்கி வந்த 42 வயது இந்தியரான ஜனார்த்தனன் தமிழ் கோவன், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மடிக்கணினியில் சட்டவிரோதமாக மாற்றங்களைச் செய்த குற்றத்திற்காக 28 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜனார்த்தனனுக்கு கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனார்த்தனன் செய்த மாற்றத்தின் மூலம், அனுமதி பெறாத ஒருவர் வேறு இடத்திலிருந்து அரசு மடிக்கணினியை தொலைதூரமாக இயக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதனால் சிங்கப்பூர் அரசு நீதிமன்றங்களுக்குச் சொந்தமான 18,000-க்கும் மேற்பட்ட கோப்புகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், விசாரணையில் சம்பவத்தின்போது அந்தக் கோப்புகளில் இருந்து எந்தத் தகவலும் ஊடுருவப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
தனது சொந்த கணினியின் திரை பழுதடைந்திருந்ததால், தகவல் பாதுகாப்பு தொடர்பான தேர்வை அரசு நிர்வகிக்கும் மடிக்கணினி மூலம் எழுத ஜனார்த்தனன் முயன்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு நிர்வாகிக்கான தேர்வை அவர் அந்த மடிக்கணினியைப் பயன்படுத்தி மேற்கொண்டார். ஆனால், அதில் இடம்பெற்றிருந்த தேவையான பாதுகாப்புச் சோதனைகளை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பப் பயிற்சிகள் தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான ‘ஹரி பாலன்’ என அடையாளம் காணப்பட்ட நபரிடம் அவர் உதவி கேட்டுள்ளார்.
ஹரி பாலன், வேறோர் இடத்திலிருந்து மடிக்கணினியை இயக்குவதற்கான செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்யுமாறு ஜனார்த்தனனிடம் கூறியுள்ளார்.
அதன்படி செயலியைப் பதிவிறக்கம் செய்த பின்னர், ஜனார்த்தனனின் மடிக்கணினி இந்தியாவில் உள்ள இணைய இணைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டது.
அந்த நேரத்தில் ஹரி பாலன் பல்வேறு கோப்புகளை அந்த மடிக்கணினிக்கு அனுப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அரசு நீதிமன்றங்களின் முக்கியமான கோப்புகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் நிலை உருவானது.
இந்திய நாட்டவரான ஜனார்த்தனன், 2017ஆம் ஆண்டு லெனோவோ பிசிசிடபிள்யூ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேவை விநியோக நிர்வாகியாகப் பணியமர்த்தப்பட்டார்.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் சிங்கப்பூர் அரசு நீதிமன்றங்களில் வெளிப்புற சேவை வழங்குநராக இணைக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனார்த்தனன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பின்னர், அரசு கணினி அமைப்பின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் சட்டவிரோத மாற்றம் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது 28 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
