சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..!
சிங்கப்பூரில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டல் சேவைகள் மூலம் மோசடி செய்வது மட்டுமின்றி, பிறரின் கணினி அல்லது தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி அணுகுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது.
அனுமதியின்றி கணினியை அணுகுவது குற்றம்: Computer Misuse Act 1993-ன் கீழ், ஒருவரின் அனுமதியின்றி கணினியில் உள்ள தகவல்கள் அல்லது தரவுகளை அணுகுவது குற்றமாகும். இதற்காக குற்றவாளிக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், கணினியில் உள்ள தகவல்களை அனுமதியின்றி மாற்றுவது, அழிப்பது அல்லது கணினி சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்துவது போன்ற செயல்களும் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பிறரின் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் அல்லது டிஜிட்டல் அடையாளத்துடன் தொடர்புடைய தகவல்களை சட்டவிரோதமாகப் பெறுவது அல்லது மற்றவர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் சட்டத்தில் தனிப்பட்ட குற்றப்பிரிவுகள் உள்ளன.
குறிப்பாக, மற்றொருவரின் தேசிய டிஜிட்டல் அடையாளச் சேவைக்கான credentials-ஐ மோசடி போன்ற குற்றங்களுக்கு பயன்படுத்துவதற்காக பெறுவது அல்லது பிறருக்கு வழங்குவது கடுமையான குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.
ஆன்லைன் மோசடியை நேரடியாகச் செய்யாதிருந்தாலும், மோசடிக்காக பயன்படுத்தப்படும் கணக்கு, credential அல்லது பிற தகவல்களை வழங்கி உதவுவது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம். Singapore-ன் Computer Misuse Act-ல் scam offences தொடர்பான பிரிவுகளும் தற்போது இடம்பெற்றுள்ளன.
அறிமுகமில்லாத நபர்களுக்கு OTP, password, banking details அல்லது digital account credentials போன்ற முக்கியமான தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான link அல்லது message வந்தால், அதனைத் திறப்பதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதும் அவசியம்.
சிங்கப்பூரில் இணையவழி மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக சட்டம் கடுமையாக இருப்பதால், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய பொறுப்பாகும்.