சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!
சிங்கப்பூரில் ரங்கூன் சாலையில் வீட்டிற்குள் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சந்தேகப்படுபவர்கள் பிறருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் .
ஏப்ரல் 10 – ஆம் தேதி இரவு 11:25 மணி அளவில் ஆயுதம் ஏந்தி வீடு புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் நுழைந்த வீட்டிற்குள் 4 பேர் இருந்ததாகவும், அதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் காவல்துறை நேற்று(ஏப்ரல் 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: அந்த 3 இளைஞர்களும் குடியிருப்புப் பகுதியில் முன்கூட்டியே சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர். வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த 4 பேரையும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு $16,300 பணமாகவும், ஒரு தங்க நெக்லஸ் மற்றும் ஒரு தங்க வளையல் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் அனைத்தையும் பெற்றுக் கொண்டு அந்த 3 கொள்ளையர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
மத்திய காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த 3 பேரையும் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று மார்சிலிங் டிரைவில் கைது செய்தனர்.
அவர்களை கைது செய்யும் பொழுது அவர்கள் பயன்படுத்தியக் கத்தியையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
இன்று (ஏப்ரல் 13) அந்த 3 இளைஞர்கள் மீதும் ஆயுதமேந்தி கொள்ளை மற்றும் காயம் ஏற்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவர்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இது போன்ற சம்பவங்களைப் பொதுமக்கள் எதிர்கொண்டால் அமைதியாக இருக்குமாறும், குற்றவாளிகளின் தோற்றம் மற்றும் தனித்துவமான அடையாளங்களைக் கவனித்து வைத்து, காவல்துறையிடம் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவல்துறை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.