புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் விதிமீறல்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் மூடப்பட்ட பாதையில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது தேசிய பூங்கா வாரிய (NParks) அமலாக்க அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஒருவருக்கு நீதிமன்றம் ஏழு நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்தச் சம்பவத்தில் ஒரு அமலாக்க அதிகாரி காயமடைந்தார். மேலும், அங்கீகரிக்கப்படாத வெளியேறும் வழியை பயன்படுத்தியதற்காக அந்த நபருக்கு S$1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
2023 ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 10.45 மணியளவில், புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் இருந்து சில சைக்கிள் ஓட்டுநர்கள் அனுமதியில்லாத வழியாக வெளியேற முயல்வதை கண்காணிப்பு கேமரா மூலம் NParks அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, இரண்டு அமலாக்க அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர்.அப்போது மார்கஸ் லிம் ஜெ மிங் என்பவர் அதே வழியாக வெளியேற முயல்வதை ஒரு அதிகாரி கவனித்து, அவரை நிற்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகள் தங்களது அடையாள அட்டைகளை காட்டியபோதும், அவர் தனிப்பட்ட விவரங்களை வழங்க மறுத்து சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். இந்த முயற்சியின் போது, அவரைத் தொடர்ந்து வந்த அதிகாரிகள் மீது அவர் மோதியதில், அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.