கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!!
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள பயணப் பெட்டிகளைக் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் அவர்களது பயணப் பெட்டிகளைப் பெற முடியாமல், அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் பயணிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆனது நேற்று (ஏப்ரல் 18)நடந்துள்ளது. இது பல விமானங்களில் பயணித்த பயணிகளைப் பாதித்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH319 -இல் பயணித்த பயணி ஒருவர், விமானம் மாலை 4:15 மணிக்கு வந்தடைந்ததாகவும், மாலை 5 மணி முதல் தனது பயணப் பெட்டிக்காக காத்திருந்ததாகவும், ஆனால் 3 மணி நேரம் கடந்தும் எனக்கு அது கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் தைவான் மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்த விமானப் பயணிகள் தங்கள் உடமைகளை இன்னும் திரும்ப பெற முடியாமல் சம்பவ இடத்திலேயே உள்ளனர். 300 முதல் 400 பயணிகள் பயணித்த குறைந்தது 5 விமானங்கள் பாதிக்கப்பட்டதாகவும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 1000 -யைத் தாண்டக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பாதிப்புக்குள்ளான பயணிகள் நிலைமை குழப்பமானது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் அறிவிப்புகளோ அல்லது விளக்கங்களோ வெளியிடாததற்கும், போதுமான ஆதரவை வழங்காததற்கும் விமான நிலையத்தைக் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
இரவு 8 மணி அளவில் தான் விமான நிலையம் அங்கு இருந்தவர்களுக்கு உணவுகளையும் குடிநீரையும் விநியோகிக்க தொடங்கியது. இதனால் பல பயணிகள் நீண்ட நேரம் பதட்டத்துடனும், குழப்பத்துடனும் காத்திருக்க நேரிட்டதாகவும் சில பயணிகள் கூறியுள்ளனர்.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது முதல் முறை அல்ல என்றும், இந்த மாதத் தொடக்கத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டுக் காரணமாக அதன் பயணப் பெட்டிகள் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த பயணப்பெட்டி அமைப்பின் கோளாறு காரணம் குறித்து விசாரணை செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சரான ஆண்டனி லோக் , இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு கோலாலம்பூர் அனைத்து உலக விமான நிலையத்தை இயக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்குமாறு மலேசியாவின் சிவல் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.