TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..!

TPE-யில் தீயில் கருகிய சொகுசு கார்..!! வைரலாகும் காட்சிகள்..!

சிங்கப்பூர்: டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் (TPE) நேற்று (ஆகஸ்ட் 4) இரவு சொகுசு கார் ஒன்று தீடீரென தீப்பிடித்து எரிந்ததில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் காரை ஓட்டி வந்த நபர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 4) இரவு சுமார் 10:45 மணியளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. சிலேட்டர் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் லோரோங் ஹாலஸ் வெளியேறும் வழிக்கு அருகில் ஒருவெள்ளை நிற கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க எஞ்சின் பகுதியிலிருந்து புகை கிளம்பி, திடீரென தீப்பற்றிக் கொண்டது.

இந்த விபத்து குறித்த காணொளிகளானது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த காட்சிகளில் தீ காரின் முன் பகுதியில் தொடங்கி சில நிமிடங்களிலேயே வாகனம் முழுவதும் அதிவேகமாக பரவுவது தெரிகிறது.

தீயின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் சாலையோரம் இருந்த மரங்களின் கிளைகள் வரை தீ பிழம்புகள் பரவின. மேலும் சம்பவ இடத்திற்கு பின்னால் காவல்துறை ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து உடனடியாக சீரமைக்கப்பட்டதும் தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் (SCDF), தண்ணீரை பீச்சியடித்தும், அழுத்தப்பட்ட காற்று றுரை கலன் மூலமும் தீவிரமாக போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உடல்நல பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பதை SCDF உறுதிப்படுத்தி உள்ளது. இன்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 30-ம் தேதி அன்று இதே டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் திருவிழா கால அலங்காரங்களுடன் கூடிய மற்றொரு கார் தீப்பற்றி எரிந்து 13 பேருந்து சேவைகள் வரை தாமதமடைந்தன. அந்த சம்பவத்தின் வடு மாறுவதற்குள் தற்போது அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதே விரைவுச் சாலையில் இரண்டாவது கார் தீ விபத்து ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.