எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!!
சிங்கப்பூர்: நீதிமன்றத்தில் சரணடையாமல் சட்டவிரோதமாக மலேசியாவின் ஜோகூருக்கு தப்பிச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான லிம் டீனுக்கு (Lim Tean) உதவியதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சுலைமான் முகமது பிர்தௌஸ் (37) மற்றும் முகமது ஆடம் அப்துல் கரீம் (44) ஆகிய இருவரும், லிம் டீன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டி உதவ முயன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன? நீதிமன்ற உத்தரவை மீறிய விவகாரம்: செல்லுபடியாகும் சான்றிதழ் இன்றி வழக்கறிஞராகப் பணியாற்றிய குற்றத்திற்காக லிம் டீனுக்கு 3 மாதங்கள் மற்றும் 1 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை அனுபவிக்க அவர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பகல் 12 மணிக்கு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டிருந்தது.
தலைமறைவு: ஆனால், குறிப்பிட்ட நாளில் லிம் டீன் சரணடையாமல் தலைமறைவானதை அடுத்து, அவருக்கு எதிராகச் சிங்கப்பூர் நீதிமன்றம் பிடியாணை (Arrest Warrant) பிறப்பித்தது.
மலேசியாவில் கைது: ஆகஸ்ட் 6 அன்று மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மறைந்திருந்த 61 வயதான லிம் டீனை, மலேசியக் அரசுக் காவல்துறை (RMP) கைது செய்தது. அவரை மீண்டும் சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வாய்ப்பு: நீதியை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு ஆடவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணை செல்பவர்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் காவல் துறை (SPF) எச்சரித்துள்ளது.