WhatsApp மூலம் புதிய மோசடி! நண்பர்கள் அனுப்பும் கோப்புகளைத் திறப்பதற்கு முன் கவனம்..சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

WhatsApp மூலம் புதிய மோசடி! நண்பர்கள் அனுப்பும் கோப்புகளைத் திறப்பதற்கு முன் கவனம்..சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

சிங்கப்பூரில் WhatsApp செயலி மூலம் பரவும் புதிய வகை தீங்கிழைக்கும் மென்பொருள் மோசடி குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நண்பர்கள், சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளின் WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தி, வேலை தொடர்பான கோப்புகள் என்ற பெயரில் மோசடி கோப்புகள் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான நபர்களின் WhatsApp கணக்குகளிலிருந்து செய்திகள் வருகின்றன. அந்தச் செய்திகளுடன் வேலை தொடர்பான ஆவணங்கள் அல்லது வழக்கமான கோப்புகளைப் போலத் தோற்றமளிக்கும் இணைப்புகளும் அனுப்பப்படுகின்றன. அவற்றைக் கணினியில் திறக்குமாறு அறிவுறுத்தப்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் அந்தக் கோப்புகளைத் தங்களது நிறுவனத்தின் நிதி மேலாளருக்கும் அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கூறுகின்றனர்.

WhatsApp கணினிப் பதிப்பு அல்லது இணையப் பதிப்பைப் பயன்படுத்தி இத்தகைய கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து திறந்தால், தீங்கிழைக்கும் மென்பொருள் கணினியில் நிறுவப்படலாம். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன், அவர்கள் கணினியில் உள்ளிடும் தகவல்கள் மற்றும் திரையில் காணப்படும் விவரங்களையும் மோசடிக்காரர்கள் கண்காணிக்கக்கூடும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் WhatsApp கணக்குகளையும் மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடும். பின்னர் அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி அவர்களின் தொடர்புப் பட்டியலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கும் அதேபோன்ற தீங்கிழைக்கும் கோப்புகளை அனுப்புகின்றனர். சிலர் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பயன்படுத்தி அவர்களது தொடர்புகளிடம் பணம் கடனாகவும் கேட்கின்றனர்.

கணினியில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் தென்படும்போதோ அல்லது நண்பர்கள் தங்களிடமிருந்து சந்தேகத்திற்குரிய செய்திகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கும்போதோதான் பலர் தங்களது கணக்கு அல்லது சாதனம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்கின்றனர்.

இதுவரை இந்தப் புதிய மோசடி தொடர்பாகப் பண இழப்பு குறித்த புகார்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WhatsApp மூலம் வரும் அறிமுகமில்லாத கோப்புகளை அவசரப்பட்டுத் திறக்க வேண்டாம். தெரிந்த நபர்களிடமிருந்து கோப்புகள் வந்தாலும், அவற்றைத் திறப்பதற்கு முன்பு தொலைபேசி அழைப்பு போன்ற வேறு வழிகளில் அனுப்பியவரிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், WhatsApp கணக்கில் இரு அடுக்கு சரிபார்ப்பு வசதியைச் செயல்படுத்தவும், கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை அவ்வப்போது சரிபார்த்து அறிமுகமில்லாத சாதனங்களை நீக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் ScamShield செயலியைப் பயன்படுத்துவதுடன், வங்கிகளின் Money Lock வசதியையும் பயன்படுத்திப் பணத்தைப் பாதுகாக்கலாம். சந்தேகங்கள் ஏற்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் ScamShield உதவி எண்ணான 1799ஐத் தொடர்புகொள்ளலாம்.

மோசடியில் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகித்தால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைத் தடுக்கவும், காவல்துறையிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.