தீபாவளி நீண்ட வார இறுதி: சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு ICA முக்கிய எச்சரிக்கை!

தீபாவளி நீண்ட வார இறுதி: சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு ICA முக்கிய எச்சரிக்கை!

தீபாவளியை முன்னிட்டு அமையவுள்ள நீண்ட வார இறுதியில், சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் நிலவழிச் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 9ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீடிக்கும் விடுமுறைக் காலத்தில், மலேசியாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

கடந்த செப்டம்பர் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தில், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக 61 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக, செப்டம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் 5,99,000க்கும் அதிகமான பயணிகள் சோதனைச் சாவடிகளைக் கடந்துள்ளனர். இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையாகும். அன்றைய தினம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நேரங்களில், சில வாகன ஓட்டிகள் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்க மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையே, உலகளாவிய பாதுகாப்புச் சூழல் மற்றும் குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைக் கருத்தில்கொண்டு, அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ICA தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பயணிகள் அதிக நெரிசல் உள்ள நேரங்களை முடிந்தவரை தவிர்த்து தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு சோதனைச் சாவடிகளின் போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகள் குடிநுழைவுச் சோதனைகளை விரைவாக முடிப்பதற்காக MyICA கைப்பேசிச் செயலியில் உள்ள QR குறியீட்டு வசதியைப் பயன்படுத்துமாறும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

QR குறியீட்டு வசதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கான முக அடையாளச் சரிபார்ப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சோதனைச் சாவடிகளில் பயணிகளைக் கையாளும் திறன் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளியேறும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்திலும் கூடுதலாக 7,600 பயணிகளைக் கையாள முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு வாகனங்கள் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதியை (VEP) வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

நவம்பர் 2ஆம் தேதி முதல், சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமீறல், வாகன நிறுத்தம் அல்லது வாகன மாசு தொடர்பான விதிமீறல்களுக்கான அபராதங்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் வெளிநாட்டுப் பதிவு வாகனங்கள், VEP அனுமதிக்கு விண்ணப்பிக்கவோ அல்லது அதனைப் புதுப்பிக்கவோ முடியாது. மேலும், அத்தகைய வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழையவும் அனுமதிக்கப்படாது.

அதேவேளை, சோதனைச் சாவடிகளில் வாகன வரிசையை மீறிச் செல்லும் ஓட்டுநர்கள், தங்களது வாகனத்தைத் திருப்பி வரிசையின் கடைசிக்குச் சென்று மீண்டும் காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதப் பள்ளி விடுமுறையின்போது, போக்குவரத்து விதிகளை மீறிய அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 27 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர்.

எனவே, தீபாவளி நீண்ட வார இறுதியில் மலேசியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் சிங்கப்பூர் மக்கள், முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு, போக்குவரத்து நிலவரங்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்களுடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.